சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ம் தேதி ரிலீஸான படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்தார்.
நன்றாக இருக்கு என்றும் இல்லை எனவும் இரண்டுவிதமான விமர்சனங்களும் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் ‘சீமராஜா’வுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் பதியப்பட்டதால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து வேதனையுடன் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் காமெடி நடிகர் சூரி.
இவ்வளவு பேரும் எதிர்மறை விமர்சனம் பண்ற அளவுக்கு ‘சீமராஜா’ தப்பான படம் கிடையாது. ஆன்லைனில் விமர்சனம் செய்பவர்கள், கொஞ்சமாவது மனசாட்சியுடன் விமர்சனம் செய்ய வேண்டும்.
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல், ‘வாடா’, ‘போடா’, ‘என்ன படம் எடுத்துருக்காங்க’, ‘கதையும் இல்ல… ஒண்ணும் இல்ல…’ என்று பேசக்கூடாது. அதேபோல், விமர்சனம் என்ற பெயரில் படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடக் கூடாது என சூரி குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ‘தோற்க வேண்டும்’ என்று திட்டமிட்டு யாருமே படம் எடுப்பது இல்லை. ஒரு சீன் எடுக்க எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பாருங்கள். ஆன்லைனில் விமர்சனம் பண்ற நீங்களும், அதுமூலமாக வரும் வருமானத்தில்தானே சாப்பிடுகிறீர்கள். சினிமாவில் இருந்துகொண்டே, சினிமாவை அழிப்பதுதான் உங்கள் வேலையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தியேட்டர் பக்கம் சினிமா ரசிகர்கள் போகக்கூடாது என்று நினைத்தே விமர்சனம் செய்கிறீர்களே… உங்களுக்கு தயாரிப்பாளர்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா? தயவுசெய்து சினிமாவை வாழவையுங்கள்” என்று வேதனையுடன் சூரி தெரிவித்துள்ளார் .