கிராம அபிவிருத்திச் சங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியினர், பொது மக்கள் ஆகியோர் இணைந்து இந்த சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தரவை மாவீரர் துயிலும் இல்லம், வாகரை கண்டலடி போன்ற பல துயிலும் இல்லங்கள் இருந்தன. எனினும், தற்போது குறித்த இடங்களுக்கு மக்கள் செல்லமுடியாத வகையில் காடுகளால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இடங்களை எல்லைப்படுத்தி ஒரு பொது மயானமாக ஆக்கும் நோக்கில் இவ்வாறான சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமான சிரமதானப் பணிகளை குடிம்பிமலை சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னெடுத்திருந்தனர்.இது தொடர்பில்கருத்து தெரிவித்த பொது மக்கள்,
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கிலுள்ள பல மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தப்படுத்தி புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டு, வருடா வருடம் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் கிழக்கிலுள்ள அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் கார்த்திகை 27 தினங்களை நான்கு சுவருக்குள் வைத்து விளக்கேற்றி தங்களின் அரசியலுக்காக நொந்துபோயுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுகின்ற நிலைதான் தற்போது காணப்படுகிறது.
தரவை இராணுவ முகாமில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினர் குறித்த இடத்தை சிரமதானப்படுத்துவதற்குறிய பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளனர்.
நல்லாட்சி அரசில் எமது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பெரும் ஆதரவாகவுள்ளது என தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இவ்வாறான பூனித பூமிகளை பொது மயானமாக மாற்றி அவற்றினை புனரமைப்பு செய்வதற்கு எமது புலம் பெயர் தமிழ் உறவுகள் தொடக்கம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.