அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் அனைத்து ஊழியர் சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டமானது நேற்று நண்பகல் இரண்டு மணியளவில் ஆரம்பமாகியதுடன் போராட்டம் மாலை வரை தொடர்ந்து இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும் வரை போராட்டம் தொடரும், தாதியத்தை கொலை செய்யாதே அது உயிரை காக்கும் தொழிலாகும்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை இப் போராட்டம் தொடர்பாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்க தலைவர் நற்குனராஜா தெரிவித்திருப்பதாவது..
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பார்வையாளர் நேரம் முடிந்ததன் பின்னர் உறவினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரைப் பார்க்க சென்றுள்ளார்.
இதன் போது அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த ஆண் தாதியர் ஒருவர் குறித்த உறவினரிடம் உங்களது நேரம் முடிந்து விட்டது ஆகவே நீங்கள் சென்றுவிட்டு மாலை வந்து பார்க்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது பேச்சை குறித்த நபர் கவனத்தில் எடுக்காதையடுத்து இருவருக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து குறித்த நோயாளரை பார்வையிட வந்த நபரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தாதியர் தன்னை மிரட்டியதாகவும் துர் வார்த்தைகளால் பேசியதாகவும் தன்னை தாக்கியதாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த தாதியரை பொலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு என வைத்தியசாலை நிர்வாகத்திடம் கூறி அழைத்து சென்று அதன் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த தாதியரை பிணையிலேயே விடுவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த செயலானது தவறானதானது. உண்மையான குற்றவாளியை விடுத்து தவறு செய்யாதவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த தாதியருக்கு எதிராக முறைப்பாடு செய்தவர் கைது செய்யப்பட வேண்டும். அவர் தம்மிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும். அதுவரை எமது பணிபுறக்கணிப்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.
Close