முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பறித்து அவற்றிற்கு விமானப்படையினர் வேலியடைப்பதாக வட மாகாண சபையின் பிரதித் தலைவர் அண்டனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி குறித்த பிரதேச மக்களுக்கு 264 ஏக்கர் விவசாய நிலம் கையளிக்கப்பட்டது.இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் வாவட்டிக்குளம் பிரதேசத்திலுள்ள சுமார் 15 ஏக்கர் காணியைச் சுற்றி நேற்று முன்தினம் திங்கட்கிழமை விமானப்படையினர் வேலி அடைத்துள்ளனர்.
இது திட்டமிட்ட காணி அபகரிப்பு செயலென அண்டனி ஜெகநாதன் குறிப்பிட்டுள்ளார்.குறித்த காணிகள் மக்களுக்கு வழங்கப்படும்போது, நிலம் தொடர்பான ஆவணம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த நிலப்பரப்பு அரசாங்கத்திற்கு சொந்தமானதென்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த நிலப்பரப்பானது இப்பிரதேச மக்களின் பூர்வீக நிலமென அண்டனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில், யுத்த சூழல் ஏற்படுமாக இருந்தால் விமானப்படையினர் மீண்டும் இந்த காணிகளை பெற்றுக்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ளதால், வேறு வழியின்றி குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.மேற்படி காணிகள் இலங்கை விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.