இந்திய அமைதிப்படை சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த போது, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த லெப்ரினன் கேணல் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) உடலைக் கண்டுபிடிக்க முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் காவல்துறையின் சிறப்புக் குழுக்கள் தேடுதலை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திலீபனின் உடல், பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பான தகவல் கிடைத்துள்ளதையடுத்து, சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் குழு மற்றும் படை குழு என்பன அந்தப் பிரதேசத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டதான சந்தேககத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போதே திலீபனின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தெரியவந்ததாக என்று மூத்த காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லெப்.கேணல் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்து போடப்பட்டு முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெளியில் எடுத்து பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இருந்த காலத்தில், திலீபன் நினைவு நாளை அனுஷ்டிக்கும் போது, அவரது சடலத்தை பார்ப்பதற்கு முல்லைத்தீவு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
திலீபனின் புதைக்குழி இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக சந்தேகம் கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினர் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதேவேளை, 1987ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த லெப்.கேணல் திலீபனின் உடல் அவரது விருப்பத்துக்கமைய, யாழ். மருத்துவபீடத்தில், ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் சிறீலங்கா படையினர் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் புதைக்கப்பட்ட இடங்களை அழித்து அவர்களின் உடலங்களை எரித்து எதுவித சான்றுகளும் இல்லாமல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.