ஈழத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு தற்போது தமிழகத்தில் வசிக்கிறார். இவர் எழுதிய புத்தகம் யாப்பு. இவரது புத்தக வெளியீட்டில் சிறப்புப் பிரதி பெற அழைக்கப்பட்டிருப்பது இந்திய அமைதிப் படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் கரிகரனை. இதனைக் கண்டு கடுமையாக ஆதங்கமுற்றுள்ளார் திலீபன் பட இயக்குனர் அனந்த மூர்த்தி. ஆனிவேர் என்ற ஈழப் படத்தில் கதாநாயகனாக நடித்த தென்னிந்திய நடிகர் நந்தா, இவரது படத்தில் திலீபனாக நடிக்கிறார். அவர் முகப்புத்தகத்தில் எழுதிய குறிப்பை செண்பகம் இங்கே பிரசுரிக்கிறது. –ஆசிரியர்
‘திலீபன்’ திரைப்பட இயக்குனராக நான் மனம் நொந்துபோன நிகழ்வொன்றை இங்கு பகிர விரும்புகிறேன். அதுவும் திலீபனின் நினைவு நாட்களை கனத்த மனத்துடன் உலகத் தமிழினமே கடந்து கொண்டிருக்கும் இந்த துயரமான சூழலில் இந்த நிகழ்வு குறித்து பேசுவது மேலும் துன்பத்தை தருகிறது.
திலீபன் திரைப்படம் ஆயிரம் தடைகளை சந்தித்து முடங்கியிருக்கும் போது கூட நான் இந்தளவு மனம் நொந்ததில்லை. எப்படியாவது தடைகளை மீறி திலிபனின் தியாகத்தை உலகின் முன் வைப்பேன் என்ற கர்வத்துடனும் நம்பிக்கையடனும்தான் நான் இன்னும் இருக்கிறேன்.
ஆனால் இது என்னை ஆழமாக பாதித்துவிட்டது.
அதாவது திலீபின் மரணத்திற்கு நேரடி காரணமானவரும், தலைவரை கொல்வதற்கு பலமுறை திட்டம் தீட்டியவருமான இந்திய அமைதிப் படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் கரிகரனை கொண்டு, அதுவும் திலீபனின் நினைவு நாட்களில் சென்னையில் ஒரு நூல் வெளியிடுவதாக ஒரு விளம்பரத்தை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன்.
அதை தமிழ்த்தேசியவாதிகள், தமிழீழ ஆதரவாளர்கள் என்பவர்களே ( இப்போதுதான் தெரிகிறது. இது அவர்களின் உளவுத்துறை சேவகத்திற்காளன போர்வை என்று) வெளியிடுகிறார்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவி;ல்லை.
நாம் வரலாற்றை மறக்கிறோமா? அல்லது திரிக்க புறப்பட்டுவிட்டோமா?
திலீபன் வரலாற்றை படமாக்குவதற்காக நான் செய்த கள ஆய்வுகள்: சொல்லி மாளாது. அதையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம். சினிமா மொழியில் கூறினால் ‘திலீபன்’ படத்தின் நேரடி வில்லன் இந்திய அரசோ, ராஜீவ்காந்தியோ, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளோ இல்லை. இந்த மூன்றினதும் அச்சாக விளங்கிய இந்திய புலனாய்வுத்துறைதான் – அதுவும் அமைதிப்படையின் பலனாய்வுத்துறை அதிகாரியாக இருந்த இந்த கேணல் கரிகரன்தான்.
திலீபனின் உண்ணாவிரதம் உச்சத்தை எட்டி பதட்டமான சூழல், பார்த்தசாரதி போன்ற இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் திலீபனின் மரணத்தினூடாக இந்தியாவின் அகிம்சை முகம் கிழிவது மட்டுமல்ல, தமிழகத்தை மையப்படுத்திய ஈழ – தமிழக – இந்திய உறவு சிதைவடைந்து பிரச்சினை சிக்கலாகப்போவதை முன்னுணர்ந்து திலீபனின் கோரிக்கைக்கு சில சமரசங்களுடன் உடன்படும் ஒரு நிலையை எட்டுகிறார்கள். ஆனால் கேணல் கரிகரன் தனது உளவுத்துறை அறிக்கையை காரணம் காட்டி இந்த முடிவை எட்ட தடைபோடுகிறார். ராஜீவ்காந்திக்கும் இதன்வழி தவறான ஒரு வழிகாட்டலை செய்கிறார். மிகுதி என்ன நடந்தது என்பதை வரலாறு தெளிவாகவே பதிவு செய்து வைத்திருக்கிறது. 2009 இனஅழிப்பு வரை நம் முன் வரலாறு சாட்சியாகக் கிடக்கிறது. அந்தளவிற்கு ஈழ -இந்திய உறவை சிதைத்த சூத்திரதாரி மட்டுமல்ல திலீபனின் மரணத்திற்கு நேரடி காரணமானரும் கூட இந்த கரிகரன்தான்.
இவரை வரைவழைத்து என்ன பாலபாடத்தை படிக்க – அல்லது தமிழ் மக்களுக்கு சொல்ல மேற்படி புத்தக வெளியீட்டாளர்கள் விரும்புகிறார்கள்?. நான் நேரடியாகவே குற்றம் சுமத்துகிறேன். இது இனக்கொலையாளிக்கு வழங்கப்படும் கவுரவம் மட்டுமல்ல இந்திய இனஅழிப்புக்கு வெள்ளையடிப்பதுமாகும்.
ஓய்வு பெற்றபின் திடீர் ஞானோதயம் கிடைத்தது போல் இவர் போன்ற இராணுவ அதிகாரிகள் சுயவரலாறு எழுதுவதுண்டு. அண்மையில் இசைப்பிரியா, மற்றும் பாலச்சந்திரன் போன்ற பல்லாயிரக்காணக்கான சிறார்களை, பெண்களை படுகொலை செய்த கமால் குணரத்ன கூட தலைவரை பற்றி புகழ்ந்திருந்தார்.. இதன் பின்னணியை – கபட எண்ணத்தை மற்றவர்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட நாம் அதை புரியாமல் இருப்பது எவ்வளவு பேதமை.
கேணல் கரிகரனுக்கான இந்த அங்கீகாரம் – அதுவும் திலீபன் நினைவு நாட்களில் எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. திலீபனின் வரலாற்றை ஆவணப்படுத்த புகுந்த ஒரு படைப்பாளியாக – தமிழனாக இதை சொல்லும் அடிப்படை தகைமை குறைந்ளவிலேனும்: எனக்புகு இருப்பதாக நான் நம்புகிறேன்.
ஏனையவர்கள் சிந்திக்க வேண்டும். கரிகரனுக்கான எதிர்ப்பை தமிழர்கள் பதிவு செய்ய வேண்டும். அது நமது வரலாற்று கடமை. திலிபன் நினைவு நாளில் திலிபனுக்கான அஞ்சலியாகவே நான் இதை கருதுகிறேன்.
விழாவை தமிழர்கள் புறக்கணிப்பது மட்டுமல்ல விழாவை அலங்கரிக்கும் போலி தமிழ்தேசியவாதிகளின் போலி முகத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.
மாற்றுக்கருத்தாளர்களுடன் உரையாடுவது, அதன் வழி நமது அரசியல்பாதைகளை மாற்றிக்கொள்வது எல்லாம் ஏற்புடையதே.. ஆனால் இனக் கொலையாளர்களுடன் அது என்றைக்குமே சாத்தியப்படாது – அது அவர்களின் அரசியல் வெற்றிக்கே வழிவகுக்குமே ஒழிய நமக்கல்ல.
திலீபன் இந்த தெளிவுடன் இருந்துதான் தனது உச்ச தியாகத்தை நிகழ்த்தினான்.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் : திலீபன்’
-அனந்த மூர்த்தி