தெற்காசிய விளையாட்டில் நேற்று நடந்த மாரத்தானில் இந்திய வீராங்கனை கவிதா ராவுத் தங்கப்பதக்கம் வென்றதுடன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஆண்கள் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
தெற்காசிய விளையாட்டு
12–வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து வருகிறது. 8–வது நாளான நேற்றும் இந்தியா தான் பங்கேற்ற போட்டிகளில் வீறுநடை போட்டது. தடகள போட்டியில் பெண்களுக்கான மாரத்தான் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கவிதா ராவுத் 2 மணி 38 நிமிடம் 38 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஆகஸ்டு மாதம் ரியோடிஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான மாரத்தான் பந்தயத்துக்கு மராட்டியத்தை சேர்ந்த 30 வயதான கவிதா ராவுத் தகுதி பெற்றார். ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் மாரத்தானுக்கு தகுதி பெற்ற 4–வது இந்திய வீராங்கனை கவிதா ராவுத் ஆவார். ஏற்கனவே ஜெய்ஷா, லலிதா பாபர், சுதாசிங் ஆகியோர் தகுதி பெற்று இருக்கின்றனர்.
தடகளத்தில் முதலிடம்
ஆண்களுக்கான மாரத்தான் பந்தயத்தில் இந்திய வீரர் நிதேந்தர்சிங் ராவாத் 2 மணி 15 நிமிடம் 18 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தையும், இலங்கை வீரர் இந்திரஜித் (2:15.19 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் கேதா ராம் (2:21.14 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். நேற்றுடன் முடிந்த தடகளத்தில் நடந்த 39 பந்தயங்களில் இந்தியா 28 தங்கம், 22 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கத்துடன் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டியது.
சைன்சிங்குக்கு 4–வது தங்கம்
துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த 4 பந்தயங்களிலும் இந்தியா தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் சைன்சிங் 204.6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் ககன் நரங் 182 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் சைன் சிங், ககன் நரங், இம்ரான் ஹசன்கான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,863.4 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதன் மூலம் சைன் சிங் 4–வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 50 மீட்டர் ரைபிள் (புரோன்) பந்தயத்தில் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் சைன்சிங் தங்கம் வென்று இருந்தார். ஆண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் (569 புள்ளிகள்), குர்பிரீத்சிங் (566 புள்ளிகள்), மகேந்தர் சிங் (563 புள்ளிகள்) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் நீரஜ்குமார், குர்பிரீத்சிங், மகேந்தர்சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,698 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. துப்பாக்கி சுடுதலில் இதுவரை இந்தியா 12 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கபடியில் இந்தியா வெற்றி
கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது 2–வது லீக் ஆட்டத்தில் 35–21 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடர்ந்து 2–வது வெற்றியை ருசித்தது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 37–13 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை சாய்த்து 2–வது வெற்றியை சுவைத்தது. ஹேண்ட்பால் போட்டியில் லீக் ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி 40–17 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தையும், பெண்கள் பிரிவில் இந்திய அணி 47–20 என்ற கோல் கணக்கில் நேபாளத்தையும் தோற்கடித்தன.
பதக்கம் குவிப்பில் சாதனை
நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 146 தங்கம், 79 வெள்ளி, 23 வெண்கலத்துடன் மொத்தம் 248 பதக்கங்களுடன் தனது ஆதிக்கத்தை தொடருகிறது. தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இந்த முறை ஒரு மோதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறது. இதற்கு முன்பு 2006–ம் ஆண்டில் 118 தங்கம் உள்பட 214 பதக்கங்கள் வென்று இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் இதுவரை நடந்த அனைத்து தெற்காசிய போட்டிகளிலும் சேர்த்து இந்தியா 1,000 தங்கப்பதக்கங்களையும் கடந்து அசத்தி இருக்கிறது.
பதக்கப்பட்டியல்
| நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
| இந்தியா |
146 |
79 | 23 |
248 |
| இலங்கை |
25 |
53 | 79 |
157 |
| பாகிஸ்தான் |
7 |
23 | 43 |
73 |
| வங்காளதேசம் |
4 |
12 | 41 |
57 |
| நேபாளம் |
1 |
12 | 20 |
33 |
|
ஆப்கானிஸ்தான் |
1 | 3 | 11 |
15 |
| மாலைதீவு |
0 |
2 | 1 |
3 |
| பூடான் |
0 |
1 | 4 |
5 |