மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் இன்று மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது மேலும் எட்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இன்றைய தினம் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.15 வரை குறித்த புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன. இதன்போது எட்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டது. இதில் குழந்தைகளின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்தப் புதைகுழியில் மேலும் பல எலும்புக் கூடுகள் காணப்படலாம் என்ற நிலையில் நாளைய தினம் அப்பகுதி அகலமாகத் தோண்டப்படவுள்ளது. ஏற்கனவே 18 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீட்கப்பட்ட எட்டு எலும்புக் கூடுகளுடன் சேர்த்து மொத்தமாக 26 மனித எலும்புக் கூடுகள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பகுதி மக்கள் சிறிலங்கா படைகளாலும் அதன் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்ட தமது உறவுகளாக இருக்கலாமோ என மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர். தமிழர் தாயக பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டிருந்த இடங்களிலெல்லாம் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றமை அண்மைக்காலங்களில் தொடர்கதையாக உள்ளமை கவனிக்கத்தக்கது.