தாம் இலங்கைக்கு செல்வதற்கு கடவுள் வழியேற்படுத்துவார் என்று பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கையர்களை நேற்று சனிக்கிழமை 2014-02-08 சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கைக்கு வருமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் வரவேற்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தலைமையிலான குழுவே பாப்பரசரை சந்தித்தது. அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பாப்பரசர், இந்து சமுத்திரத்தின் முத்து என்று கூறப்படும் இலங்கையில் கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன. இதன் காரணமாக இந்து சமுத்திரத்தின் முத்துவில் இருந்து கண்ணீர் சொரியப்பட்டது.
துரதிஸ்டவசமாக உள்நாட்டு போர் காரணமாக பலர் பாதிக்கப்பட்டதுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டன. இந்தநிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலகுவான காரியமல்ல. எதிரிகளை ஒன்றிணைப்பதற்கு நேற்றைய காயங்களின் வடுக்களும் ஒத்துழைப்புமே துணை புரியும். நம்பிக்கை மூலமே சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைய முடியும் என்றும் பாப்பரசர் குறிப்பிட்டார்.