நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தலைமைகள் எமக்காக போராடுகின்றார்கள். தமிழர்களுக்காக அகிம்சை வழியில், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில்அவர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.
டட்லி-செல்வா ஒப்பந்தம் போன்ற சில ஒப்பந்தங்கள் அப்போது கிழித்து எறியப்பட்டன. இதன் மூலமாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என குறிப்பிட்டார்.
நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பல பொது மக்கள் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொலை செய்தது இராணுவமே. அவர்கள் மீது குண்டு போட்டு அப்பாவி மக்களை, குழந்தைகளை படுகொலை செய்துள்ளார்கள்.
இவ்வாறு கொலை செய்தவர்களை சர்வதேசத்தின் முன்னிலையில் நிறுத்துவதால் நாட்டின் இறையாண்மைக்கும், இராணுவத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது பொய்யான விடயம் என குறிப்பிட்டார்.
மேலும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்திருந்தால் வாருங்கள் விசாரித்து விட்டு உடனே அனுப்புகின்றோம் என்று கூறி அழைத்து செல்லப்பட்டவர்கள் இது வரை வீடு திரும்பவில்லை. இவர்களை தேடி நாடு முழுவதிலுமுள்ள மக்கள் இரவு பகலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டால் அதை ஏன் கொடுக்க மறுக்கின்றீர்கள், அதுமட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா யுத்தத்தின் போது ஒரு காலை இழந்துள்ளார்.
இதனால் அவர் பயங்கரவாதியா? யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றம் செய்தவர்களா எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.