உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.
நாளை சிட்னி நகரில் நடக்கும் முதல் கால்இறுதி போட்டியில் இலங்கை-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்க அணி யில் கேப்டன் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுபெலிசிஸ், மில்லர், டுமினி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஸ்டெயின், மார்கல் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் சங்ககரா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து உள்ளார். தில்சான், திரிமானே, ஜெயவர்த்தனே, மேத்யூஸ் போன்ற பேட்ஸ்மேன்களும் உள்ளனர். பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணியை விட இலங்கை சற்று பலவீனமாகவே காணப்படுகிறது.
காயம் அடைந்த ஹெராத் உடல் தகுதி பெற்றால் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார். இது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். வலுவான தென்ஆப்பிரிக்க அணி நாக்அவுட் ஆட்டங்களில் அதிர்ஷ்டம் இல்லாமல் தோற்றுவிடும் என்று கருத்து நிலவுகிறது.
இதுவரை 6 முறை தோற்று இருக்கிறது. ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. அதை மாற்ற வேண்டும் என்று தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள். இலங்கை அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் மண்ணை கவ்வினாலும் மற்ற ஆட்டங்களில் சிறப்பாகவே செயல்பட்டது. இதனால் அந்த அணி தென்ஆப்பிரிக்காவுக்கு கடும் சவாலாக இருக்கும்.
இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சங்கக்கரா இதுவரை 4 சதங்கள் உள்பட 496 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார். இதன் மூலம் ஒரு உலக கோப்பை போட்டியில் மட்டுமின்றி, ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சங்கக்கரா படைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக கால் இறுதி வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன் பிரன்டன் டெய்லர் 2 சதங்கள் உள்பட 433 ரன்கள் எடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் அதிக சிக்சர்கள் (20) அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலையிலும் இருக்கின்றனர்.மேலும் 417 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார். தற்போது அதிக ரன்கள் எடுப்பவர்கள் யார் எனபதில் சங்கக்காராவுக்கும் டி வில்லியார்சுக்கும் தான் போட்டி .