யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ முதல் இரண்டு போட்டிகளில் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை.
குறிப்பாக ஆஸ்திரியா அணியுடனான இரண்டாவது போட்டியில் பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதனால் ரொனால்டோ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், ஹங்கேரிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடிக்க, போர்ச்சுகல் அணி, நூலிழையில் தப்பி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
போர்ச்சுகல் அணியின் கேப்டன் 31 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2004-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தில் 2 கோலும், 2008-ம் ஆண்டில் ஒரு கோலும், 2012-ம் ஆண்டு தொடரில் 3 கோலும் அடித்தார். தற்போதைய ஐரோப்பிய கால்பந்து திருவிழாவில் இதுவரை 2 கோல்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் 4 ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.