காணமல் போன நிலத்தில் காணமல் போன
தன்னொரு மகனைத் தேடும் தாயை சந்தித்தேன்.
பனைமர நிழலின் பாதி அவள்மீது விழுந்திருந்தது.
மறு பாதியை நாயொன்று
கவ்வி இழுத்துக்கொண்டிருந்தது.
கண்ணாடிச் சிதிலங்களின் மீது அவள் நடந்து
வந்திருக்க வேண்டும்.
பாதங்களின் குருதி ஒரு நிலத்தை சிலுவையாக
இழுத்து வந்ததை நினைவாக்கியது ..
நிலமும் மகனும் இல்லாதவளிடம் பேச
அஞ்சினேன்.சங்கிலியி டப்பட்ட உடலோடு தன்
சிலுவையை வலிகொண்டு இழுத்து
பனைமரங்களில் ஒரு மரமாக மறைந்தாள்.
நீங்கள் பனைக் காடுகளில் நுழைகையில்
விழிகள் புடைத்து
நாக்கு தள்ளி சூலமேந்திய குலதெய்வத்தை
எதிர்பட்டே வீடு திரும்ப இயலும்.
அக்கணத்தில் நாய்
விழுங்கிய பனை நிழல் உங்களை
விழுங்கியிருக்கும்.
○
பாலைநிலவன்