பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய மொந்தையில் பழைய கள்ளு!

பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பதை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமாக மாற்றப் போகிறோம் என்று கூறுகிறார் ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. பூவை பூ என்றும் சொல்லலாம் புஷ்பம் என்றும் சொல்லலாம் என்ற விளையாட்டுத்ததான் ரணிலின் விளையாட்டு. ஆக, தமிழர் விடயத்தில் ஸ்ரீலங்காவில் ஆட்சியாளர்கள் மாறுகின்றனரே தவிர, ஆட்சியின் போக்கில் ஒரு மாற்றமும் இல்லை என்ற உண்மையை மைத்திரிபால சிறிசேன – ரணில் கூட்டணி ஆட்சியும் உணர்த்துகிறது.

பயங்கரவாதத் சட்டம் ஈழத் தமிழ் இனத்தை ஒடுக்கும் கொடிய சட்டம். இன்றைக்கும் தமிழ் ஈழ இனம்  இச் சட்டத்தால் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது.  ஒடுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சட்டம் சிங்களப் பேரினவாத அரசுக்கு சிங்களப் பேரினவாத வெறியை தீர்க்க அளவற்ற அதிகாரத்தை கொடுக்கிறது. தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்று இச் சட்டம் சிங்களவர்களுக்கு விளக்கம் அளிக்கிறது. இதனால் காண்ட இடத்தில் கைது செய்யலாம். காண்ட இடத்தில் சுட்டுக்கொல்லலாம்.

இந்த கொடிய இரக்கமற்ற சட்டத்தினால் கடந்த காலத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளார்கள். பலர் சிறைகளில் காரணமின்றி அடைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுவிப்போம், ஜனநாயகத்தை மலரச் செய்வோம்! பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம்!! என்றெல்லாம் இன்றைய சிங்கள அரசில் உள்ளவர்கள் வார்த்தை ஜாலமிட்டனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் பல்வேறு கதைகளைவிட்டனர். அது கொடியதொரு சட்டம் என்றும் அது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் சட்டம் என்றும் கூறினர். இன்றைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஆட்சிக்காலத்தில் மனித உரிமைப்போராளியாக மாறியிருந்தார். ராஜபக்சவின் அநீதிச் செயற்பாடுகள் முதல் இதைப் போன்ற சட்டங்கள் வரை அவர் கண்டித்துப் பொங்காத விடயங்கள் ஏதுமில்லை.

இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழித்துவிட்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வரப் போகின்றனராம். தடை என்ற சொல்லை எதிர்ப்பு என்று மாற்றுவதே மைத்திரிபாலா அரசின் மாற்றம். ஏன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டும்? உங்கள் அரசு ஒடுக்குமுறையை என்றைக்கு நிறுத்தாது. என்றும் தொடரும் உங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் அடக்குவீர்கள்? ஜனநாயக நாடாக மாறி வரும் ஸ்ரீலங்கா சர்வதேச கோட்பாடுகளுக்கு அமையச் செய்கிறதாம் என்று மங்கள சமரவீர கூறுகிறார்.

மகிந்த ராஜபக்ச அரசு கொடிய சர்வாதிகார ராட்சத அரசு என்றால் அதனைவிட துளியளவும் விஞ்சியதில்லை மைத்திரி – ரணில் அரசு. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வித்தில் ஈழத் தமிழ் இனத்தை அழித்திருக்கிறது. சுதந்திரக் கட்சி ஒரு விதத்தில் ஈழத் தமிழ் இனத்தை அழித்திருக்கிறது. இரண்டு கட்சிகளும் சேர்ந்தால், சேர்ந்து ஆட்சி அமைத்தால் எப்படி ஈழத் தமிழ் இனத்தை அழிக்கும்? அதுதான் இப்போது ஈழத் தமிழர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

எமக்கு எதிராக வலுவான சட்டங்களை இயற்றுகிறது மைத்திரி அரசு. எம்முடைய குற்றச்சாட்டான இனப்படுகொலை அரசு என்ற குற்றசாட்டிலிருந்து  எங்களைப் பயன்படுத்தியே விடுவிக்கிறது மைத்திர அரசு. தாம் மேற்கொண்டது இன அழிப்பு யுத்தம் இல்லை என்றும் பயங்கரவாதத்தை அழிக்கும் யுத்தமே என்றும் தமிழர்கள் என்றைக்கும் தமது உரிமையை கோருவதில் பின் நிக்காதவர்கள் என்பதால் பயங்கரவாதப் பிரச்சினை நிரந்தரமானது என்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிரந்தரமாக கொண்டு வந்து ஈழத் தமிழ் இனத்தை வரலாற்று ரீதியாக ஓடுக்குகிறது மைத்திரி அரசு.

தமிழர்களை ஒடுக்கும் நோக்கம் ஸ்ரீலங்காவின் அரசியலின் அடிப்படை. பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது எதிர்ப்புச் சட்டம் என்பன தமிழர்களின் விடுதலைக் கனவை, உரிமையை மறுக்கும் கொடிய சட்டங்கள். அவற்றை நிரந்தரமாக்கு வதன் மூலம் இன்றைய அரசியல் தலைவர்கள் நாளைய ஈழச் சந்ததிக்கு பெரும் ஆபத்தை வைத்து விட்டுச் செல்கிறோம் என்பதை குறித்து யாருக்கும் கவலையில்லை. பழுத்த மூத்த அரசியல்வாதி என்று புகழ்ந்து மயக்குகிறது சிங்கள அரசு.

இந்த அரசு நீதி தரும், இந்த அரசு உரிமை தரும், இந்த அரசு தீர்வு தரும் என்று நம்பிக் கெடும் எங்கள் தலைவிதியை என்னவென்பது? எதிர்கால இன ஒடுக்குமுறைக்கு இன்றைக்கே வலுவான அத்திவாரமிடும் அரசுக்கு எங்கள் தலைவர்கள் முண்டு கொடுக்கும் எங்கள் தலைவிதியை என்னவென்பது? சிங்கள அரசியல்வாதிகள் கைதேர்ந்த அரசியல் கலையால் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளை வீழ்த்தி எங்களை அழித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆசிரியர்,
செண்பகம்.
05.10.2016

நல்லாட்சிமகிந்த ராஜபக்சமாற்றம்மைத்திரிபால சிறிசேனரணில் விக்கிரமசிங்க
Comments (0)
Add Comment