திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சாதாரண குக் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் நாயகன் கதிர்.
ஆங்கிலம் மீது அதீத ஈடுபாடு இல்லாத கதிருக்கு தாய்மொழி மீது பற்று அதிகம். தனது ஊர் மக்களை யாருமே மதிப்பதில்லையே என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்.
ஊருக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டுமென்றால் வக்கீலுக்கு படிக்க வேண்டும் என்று அந்த ஊர் பெரியவர் ஒருவர் கூற, தான் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவோடு அரசு சட்டக்கல்லூரியில் சேர்கிறார்.
அதே வகுப்பில் படிக்கும் ஆனந்திக்கு, கதிரின் வெளிப்படைத் தன்மையால் அவர் மீது அன்பு கலந்த பாசம் வருகிறது. கல்லூரியில் மட்டுமில்லாது வீட்டிற்கு சென்றாலும் கதிர் புராணமே பாடுகிறார் ஆனந்தி.
இந்த நிலையில், ஆனந்தி வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வரும்படி கதிர் அழைக்கப்படுகிறார். திருமணத்திற்கு செல்லும் கதிருக்கு, அங்கு அவமரியாதை ஏற்படுகிறது.
இதனால் மனம்நொந்து போகும் கதிர் அவர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறார்.
ஆனால் தொடர்ந்து தொல்லை அளிக்கும் அவர்களது தொல்லை தாங்காமல், ஒருநாள் கல்லூரிக்கு மதுஅருந்திவிட்டு வந்து மாட்டிக் கொள்கிறார் கதிர்.
கல்லூரி முதல்வர், கதிருக்கு அறிவுரை கூறி, கதிரை தேற்றி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி கதிரை ஊக்கப்படுத்தி அனுப்புகிறார்.
கல்லூரி முதல்வரின் ஊக்கம் கதிருக்கு புது உத்வேகத்தை கொடுக்க, புதிய கனவோடு வெளியே வரும் கதிர், தனது அப்பா உடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.
கடைசியில், தனக்கு எதிராக கிளம்பிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அதே கல்லூரியில் படித்து கதிர் வழக்கறிஞர் ஆனாரா? தனது ஊருக்கு குரல் கொடுக்கும் நபராக விளங்கினாரா? ஆனந்தியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரியேறும் பெருமாள் ஒரு அற்புதமான படைப்பு.
கலைஞர்களின் நடிப்பு, இடம் தேர்வு, கேமரா என அனைத்திலும் வெற்றியடைந்த படம் என்று கூறலாம். அனைத்து கலைஞர்களுமே சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்கள். நடிகர், நடிகைக்கு இடையேயான காதலும் ஆத்மார்த்தமானதாக உள்ளது.
ஆண், பெண் இருவருக்கிடையேயான காதலை நாகரிகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள். எந்த இடத்திலும் சினிமாத்தனமாக இருப்பதாக உணரமுடியவில்லை.
படத்தை காட்சிப்படுத்திய விதம் அற்புதம், ஒளிப்பதிவில் ஸ்ரீதர் மெனக்கிட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.
மொத்தத்தில் `பரியேறும் பெருமாள்’ சிறப்பான படைப்பு.