பறவையின் கண்ணீர் பற்றிய தீர்மானங்கள்



……………………..
காற்றின் ஒரு துமி ஈரப் படலம்
எம்மேல் விழும் கணம் 
அது பறவையின் எச்சமாகவோ
இலைகளின் வியர்வையாகவோ
குரக்கனில் விளைந்த மண்ணிறத் தோலின் மேல் படியலாம்
00
தோலின் மயிர்க்காலில்
ஊடுருவி ஈரலிப்பின் மெல்லிய திராவகம்
ஒரு பசை போல் ஒட்டிக் கொண்டு
மயிர்க் காலின் வேர்களில் ஒலியெழுப்பும்
அது ஒரு மெல்லிய முனகலாய் பச்சை நரம்பில் கூச்சலிடும்
00
ஒரு பறவையின் கண்ணீரை அறிவாயா?
பறக்கும்போதோ
அல்லது
துணையிழக்கும்போதோ
அல்லது
சிறகொடிந்த வேளையோ
அது கண்ணீர்விட்டு அழக்கூடும்
00
பறவையின் பறத்தல்
இரைதேடலுக்கானது
பறவையின் பறத்தல்
கூடடைதலுக்கானது
பறவையின் பறத்தல்
சுதந்திரத்துக்கானது.
00
சுதந்திரப் பறவையொன்று
உச்சி வானில் பறக்கும்
கூர்ப்படைந்த அதன் இறகுகள்
வானத்தைக் கிழிக்கும்
அதன் கண்ணீரோ
ரகசியமானது
00
பறவையின் கண்ணீரில்
உப்பறிய பறவையை தோலுரித்து – அது
வெந்நீரில் மிதக்கையிலும்
பறவை மிதந்துகொண்டுதான் இருக்கின்றது
ஒரு வானத்தில் பறப்பதைப் போல்
00
பறவையின் கண்ணீர் ரகஷ்யமானது- அதை
அறியமுடிந்திராத வேளை
பறவை கண்ணீர் உகுப்பதில்லை
என்றெழுதி
மழைவெளிகளில் கரைய விட்டேன்.

0

கௌதமி. யோ

ஈழக் கவிதைகள்கவிதைகள்கௌதமி. யோபறவைகள்
Comments (0)
Add Comment