பார்முலா1 கார்பந்தயத்தில் ஜெர்மனி கிராண்ட்பிரீயில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12–வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரீ பந்தயம் அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.458 கிலோ மீட்டர் ஆகும்.
வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 30 நிமிடம் 44.200 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து, அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டனின் 6–வது வெற்றி இதுவாகும். அவரை விட 6.9 வினாடி பின்தங்கிய ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சியர்டோ (ரெட்புல் அணி) 2–வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.
தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளானார். இந்திய தொழிலதிபர்களுக்கு சொந்தமான போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹல்கென்பெர்க் (ஜெர்மனி) 7–வதாக வந்து 6 புள்ளிகளை பெற்றார். இதுவரை நடந்துள்ள 12 சுற்று முடிவில் ஹாமில்டன் 217 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் முதலிடத்தில் தொடருகிறார்.
ராஸ்பெர்க் 198 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், ரிச்சியர்டோ 133 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 28–ந்தேதி பெல்ஜியத்தில் நடக்கிறது.