வாய்ப்பு அமைந்தும் கல்வியில் அக்கறை செலுத்தாமல் தோல்வியடைந்துள்ள அவரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஒரு சமூக அமைப்பின் கோளாறை வெளிக்கொணர்ந்துள்ளது. செல்வி.சுவாதியை கவர்ந்து செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இராஜ்குமார் சென்னை வந்து நுங்கம்பாக்கத்தில் தங்கியுள்ளான். மூன்று மாதங்கள் எந்த வேலையும் செய்யாமல் அறை எடுத்து தங்கி இக்குறுகிய நாட்களில் ஒரு அப்பாவி பெண்ணை கொன்றதற்கு காதல் மறுப்பு என்ற அசிங்கமான காரணத்தை எல்லா ஊடகங்களும் அதனதன் தன்மைக்கு ஏற்ப உமிழ்ந்து நிரப்பிக்கொண்டுள்ளன. வணிக ரீதியான வருமான பெருக்கத்துக்கு எந்தவித நிலைக்கும் தங்களைக் கொண்டு சென்றுகொண்டுள்ளன. சமூகத்தில் இன்று நிலவும் அவலத்தின் காரண காரியங்களை எடுத்து அதனை சீர்திருத்த எந்த ஊடகங்களும் தயாரில்லை; அவ்வூடகங்களின் பேட்டிகளில் பங்கு கொள்ளும் சமூக அக்கரையாளர்கள் என்று கூச்சமேயின்றி சொல்லிக்கொண்டு இருப்பவர்களும் தயாரில்லை.
தமிழகத்து திரைப்படங்களில் சமூகத்தின் கீழுள்ள பொருளாதார நிலையிலுள்ளவன் ஒரு பெரும் வசதியுடைய பெண்ணால் காதலிக்கப்படுவது தமிழக இளைஞர்களின் மனதில் அழியா இடம் பெற்று கண்டதும் காதல், ஒருதலைக்காத என்ற நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. கடைக்கோடி ஊரிலிருந்து பல நூறு மனிதர்கள் தொடர்பிலுள்ள ஒரு முக நூல் பக்கத்தின் அறிமுகத்தால் கனவுகளை கண்டு தொடர்பிலுள்ள ஒரு பெண்ணின் மனதினை தவறாக புரிந்து கொண்டு காதல் மயக்கத்தில் தொலைதூர சென்னைக்கு வந்து அதையே குறிக்கோளாய் அடைய முயற்சித்து தோல்வியடைந்து கொலை செய்யும் அளவில் ஒரு இளைஞன் சென்றதற்கு கல்வியும் ஒரு காரணம். முப்பதாண்டுகளுக்கு முன்னர் வரை ஆரம்பப் பள்ளியிலிருந்து தொடங்கி தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நீதி போதனை வகுப்புகளை நீக்கியது யார்? அதன் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம்.
சட்டங்களை மதித்தல், பொதுச் சொத்தை காத்தல், பெரியவர்களுக்கு மரியாதை, பொது இடங்களில் நன்னடத்தை, பிறருக்கு உதவி செய்தல், குறுக்கு வழியில் செல்லாமை, உழைப்புக்கு மரியாதை, கல்வியின் உயர்வு, பெண்களை மதித்தல் போன்ற நல்ல அறிவுரைகளை கூறி நல்ல குடிமகனாக வளர்க்கும் முயற்சிகள் இப்போது இல்லை. இதில் பாலினப் பாகுபாடில்லை. அதனாலேயே இன்று சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி அனைத்து ஊர்களிலும் மாணவர்களிடம், இளைஞர்களிடம் ஒழுக்க உணர்வுகள் இல்லை. பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் அதிக நாட்டமின்றி பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை அருவருப்பாக உள்ளது. முன்பெல்லாம் சாலையில் செல்ல இடப்பக்கத்தை கடைபிடி என்ற அறிவுரைகள் இப்போதில்லை. ஆடு, மாடுகள் கூட சென்னை வீதிகளில் ஒரு விதியைக் கடைபிடிக்கின்றன. மனிதர்களிடம் அது இல்லை. எத்தனை சட்டங்களிருந்தும் மக்களிடம் அவற்றைக் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடில்லை. பொது சுகாதாரத்திற்கு எதிரான காரியங்களை மக்கள் கண்டுகொள்வதில்லை.
சென்னை வீதிகளில் குறிப்பாக கண்ணகி சிலைப் பகுதியில் கண்ணீரும் கம்பலையுமாக ஏமாந்து திரியும் பெண்கள் பலரின் கதை ஒழுக்கமற்ற, கட்டுப்பாடற்ற வாழ்வின் முறையால் அமைகின்றன. காதல் வாழ்வு வேறு. காதலுக்காக மட்டுமே திரிவது வேறு. கல்வியில் கோளாறு இருப்பதால்தான் இவ்வளவு அசம்பாவிதங்கள்.கண்ட இடங்களில் வௌவால் போல வாயாலேயே மலஜலம் கழிப்பதுபோல் துப்புகிறார்கள். அருகாமையில் உள்ளவர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை. பேசுகின்ற சொற்கள் அசிங்கத்தை சேர்த்து வெளிவருகின்றன. கல்வியில் ஒழுக்கம் முழுமையாக இல்லை. அதற்கு சமீப அரசாங்கங்கள் முயலவில்லை. வாழ்ந்து முடித்துக்கொண்டிருப்பவர்களோ ஒதுங்கி விடுகிறார்கள். சமூக அக்கறை இங்கு விலைபோகின்றது.
சென்ற வாரத்தில் கொலை செய்யப்பட்ட செல்வி.சுவாதி சென்னை பெரு வெள்ளத்தினூடே எவ்வளவுக்கு உண்மையான மனிதத்துவத்தைக் காட்டினார் என்பதை நேரில் நான் கண்டுள்ளேன். அவரின் இனிய முகமும், சொற்களும் எவரையும் தனித்து கவரும் இயல்புடையவை.பாலின வேறுபாடின்றி அனைவரிடமும் எல்லை வகுத்தே நட்புடன் பழகியுள்ளார். ஒரு சமூக அக்கறை அவரிடமிருந்தது. அதனாலேயே அவரால் யாரையும் வெறுக்க இயலவில்லை. இந்த ராஜ்குமார் தன்னை தொடர்ந்து வருவதை அறிந்தும் பெரிய விவகாரமாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவரின் தோழி வெளிப்படுத்தியுள்ளார். இந்த இளைஞன் ஒரு சராசரிக்கும் கீழான நிலையில் இருப்பதால் செல்வி.சுவாதி அவனின் பின்தொடர்தலை அலட்சியப்படுத்தியுள்ளார். எல்லா இளைஞர்களின் இயல்புதான் என்றுதான் அவர் கருதியுள்ளார்.
காதல் என்றாலும் கத்தரிக்காய் என்றாலும் வேறு படுத்தி பார்க்க இயலா ஒரு சமூக அக்கறையில்லா, மாறுபட்ட இளைஞன் அப்புன்னகையை தனக்கு மட்டுமானதாக கருத்திலேற்றி கனவு கண்டு எவ்வகையிலும் ஒப்புக்கொள்ள முடியாத கால இடைவெளியில் ஒரு அப்பாவி பெண்ணை தனதாக்கிக் கொள்ள முயன்று, திட்டமிட்டு சென்னையில் பயன்பாடு இல்லாத ஒரு அரிவாளை பயன்படுத்தி கழுத்து,முகத்தை சீவியெடுத்து கொன்றது அவசரத்தினாலோ, யோசிக்காமலோ செய்த ஒன்று அல்ல. அக்கொலைக்குப் பின்னால் அவன் நடந்து சென்ற விதம், இருப்பிடத்தை விட்டு வெளியேறிய விதம் என அவன் நடந்து கொண்ட முறையைப் பார்த்தால் அவன் தான் இனம்புரியாத நிலையில் இச்செயலை செய்தவன் என்று கருதுவதை விட கொடிய குற்றத்தை செய்யக் கூடியவன் என்பதை விளக்கும். மூன்று மாதங்கள் பின் தொடர்ந்ததாகவும், ஐந்து முறை தன்னைக் காதலிக்க வற்புறுத்தியும் அவர் அலட்சியப்படுத்தியதால் கொன்றேன் எனக் கூறும் அவன் மன நோயாளி இல்லை. வருடங்கள் பலவும் கடந்து காத்திருக்கும் இளைஞர் கூட்டத்தில் இவன் வேறுபட்டவன். அகங்காரத்துடன் தன்னை காதலிக்கவில்லையெனில் கொலைதான் என்ற மனப்பக்குவமுடையவனை மன்னிக்கவோ, விடுவிக்கவோ இயலுமா? எந்த விதத்திலும் இந்த குற்றத்துக்கு உடந்தையாகாத சுவாதி என்ற அப்பாவிப்பெண்ணின் கொலை இச்சமூகத்திற்கு விடுத்துள்ள சவால் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வை செய்வோம்.
இன்னும் எத்தனை ராம்குமார்கள் இங்கு திரிந்து கொண்டுள்ளார்களோ? ஆகவே சமூக கட்டுப்பாட்டை நாம் கடைப் பிடிக்கும் வகையில் ஒரு நடைமுறை வரவேண்டும். இன்றைக்கு சுவாதிக்கு ஏற்பட்ட நிலை நாளை யாருக்கும் வரக்கூடாது என்று இப்போது வேண்டுமானால் அனைவரும் சொல்லலாம். அது வரக்கூடாது என்றால் நாம் கேட்கும் நடைமுறைகள் வரவேண்டும்.
செல்வி.சுவாதியின் மரணம் அரசாங்கத்தின் கண்களை திறக்க வேண்டும். நீதிபோதனை வகுப்புகளை கட்டாயமாக அனைத்து மட்டத்திலும் கொண்டுவரவேண்டும். பாலுறவுக்கல்வி மிக அவசியமானது. பெண்களோ, ஆண்களோ இருவருக்குள்ளும் பார்த்தவுடன் தோன்றும் பாலின கவர்ச்சிகளின் விளைவுகளுக்கு அது விடிவாயிருக்கும். ஒரு நல்ல சமூகத்திற்கு ஒழுக்கமும், நன்னடத்தையும், கட்டுப்பாடும் அடிப்படை காரணிகளாகும் என்பதை உணர்ந்து நாம் எல்லோருமே அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றியடைவோம்.
– வழக்கறிஞர் கலைமணி