வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு ஜெனிவா மாநிலத்தில்

வங்கக்கடலிலே வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த நினைவெழுச்சி நிகழ்வானது 18.01.2014 சனிக்கிழமை அன்று ஜெனிவா மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி  நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் தமிழர் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டது. ஜெனிவா வாழ் தமிழ்மக்கள் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வானது மீள் எழுச்சியுடன்,மிகவும் உணர்வுபூர்வமாகவும் நம்பிக்கையை தருவதாகவும் அமைந்திருந்தது.

மாவீர வேங்கைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்பு பேச்சோடு கவிதைகளும் இடம்பெற்றன. அத்துடன் இளையோர்களால் காலத்தின் தேவை கருதிய கருப்பொருளை கொண்ட „வெடித்த நிலம்“ நாடகமானது மக்களின் பாராட்டுக்களைப் பெற்றதுடன் மிகவும் உணர்பூர்வமாகவும் இருந்தது.

நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

“சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு”

கிட்டண்ணாஜெனீவாவில்நிகழ்வு
Comments (0)
Add Comment