பெடரர் வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு சிறந்த பயிற்சி களமாக கருதப்படும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் தரவரிசையில் 3–ம் இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், 9–ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டை இழந்த முர்ரே அடுத்து செட்டில் பெடரரின் 3–வது மற்றும் 5–வது கேம் சர்வீஸ்களை முறியடித்து 4–1 என்ற கணக்கில் முன்னிலை கண்டார். ஆனால் அதன் பிறகு சுதாரித்து மீண்டெழுந்த பெடரர் 4–4 என்று சமனுக்கு கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த செட்டையும் தனக்குரியதாக்கி வெற்றிக்கனியை பறித்தார். 6–3, 7–5 என்ற நேர் செட்டில் முர்ரேவை தோற்கடித்த 5 முறை சாம்பியனான பெடரர் அரைஇறுதியில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை சந்திக்கிறார்.

மற்றொரு கால்இறுதியில் பிரான்சின் ஜூலியன் பென்னட் 1–6, 6–1, 6–2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். சின்சினாட்டி டென்னிசில் பிரான்ஸ் வீரர் ஒருவர் அரைஇறுதி சுற்றுக்குள் நுழைவது 14 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். அடுத்து அவர் ஸ்பெயினின் டேவிட் பெரரை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 6–ம் நிலை வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா, 2–ம் நிலை வீராங்கனை ருமேனியாவின் சிமோனா ஹலேப்புடன் மோதினார். 2 மணி 32 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் ஷரபோவா 3–6, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் ஹலேப்பை வெளியேற்றினார். அரைஇறுதியில் ஷரபோவா, செர்பியாவின் இவானோவிச்சை சந்திக்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–3 என்ற நேர் செட்டில் செர்பியாவின் ஜான்கோவிச்சை 58 நிமிடங்களில் ஊதித்தள்ளினார். தனது முதல் சின்சினாட்டி கோப்பையை நெருங்கியுள்ள செரீனா அரைஇறுதியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியுடன் மோதுகிறார்.

அமெரிக்காவில்ஓபன்கருதப்படும்களமாகசர்வதேசசின்சினாட்டிசிறந்தடென்னிஸ்நடந்துபயிற்சிபோட்டிபோட்டிக்குவருகிறது
Comments (0)
Add Comment