போர் இன்னும் ஓயவில்லை! குமுதத்தில் தீபச்செல்வன்

ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் தமிழர்களுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை என்று குறிப்பிடுகிறார் கவிஞர் தீபச்செல்வன். ஸ்ரீலங்கா அரசால் மீட்கப்படும் வெடிபொருட்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் குறித்து குமுதம் இதழில் எழுதிய கட்டுரையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் ராஜபக்சேவை தோற்கடித்து, இலங்கையில் நிலவிய சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். ஜனநாயக ஆயுதத்தை கையில் எடுத்த ஈழத் தமிழ் மக்களின் கைகளில் சிங்களப் பேரினவாதிகள் வெடிபொருட்களை திணிக்கின்றனர். அத்துடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடகிழக்கில் சுயாட்சி தீர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் வாக்களித்து தமது ஜனநாயக குரலை வெளிப்படுத்தினர். ஆனால் சிங்களப் பேரினவாதிகளோ, தமிழ் மக்களின் உடலில் தற்கொலை வெடிகுண்டு அங்கியை அணிவிக்கின்றனர்.

2009இல் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதேபோன்றதொரு மே மாத்தில்தான் சக்தி மிக்க நாடுகளின் உதவிகள், ஒத்தாசைகளுடன் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது. தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதங்களை விரும்பி ஏந்தவில்லை. அவர்கள் ஆயுதங்களை ஏந்த நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று தலைவர் பிரபாகரன் சொல்வதை இன்று சிங்களப் பேரினவாதிகள் நிருபிக்கின்றனர். ஆம், தமிழர்களின் கைகளில் மீண்டும் ஆயுதங்களை திணிக்கப் பார்க்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈழத்தின் வடக்கில் சில இடங்களில் தற்கொலை வெடி குண்டு அங்கியும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டன. தற்போது இலங்கை அரசியலில் நிலவும் மைத்திரிபால சிறிசேன – ராஜபக்ச தரப்புகளின் அரசியல் போரில் ஆட்சியை கைப்பற்ற ராஜபக்சே தரப்பினரே இவ்வாறு வெடிபொருட்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ராஜபக்சே தரப்பே இருப்பதாக மைத்திரிபாலா சிறிசேன அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் 2009இற்கு முன்னரானவை என்றும் இதைப் போல பல வெடிபொருட்கள் 2009இற்குப் பின்னர் பல இடங்களில் மீட்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதும் “வடக்கில் மீண்டும் புலிகள்” வந்துவிட்டனர் என்று ராஜபக்ச தரப்பினர் பிரசாரம் செய்தனர். இலங்கை அரசு நிலங்களை விடுவித்து, இராணுவத்தை குறைத்தனால் மீண்டும் புலிகள் உயிர் பெற்றுவிட்டனர் என்றனர் அவர்கள்.

இலங்கையின் புதிய அரசு சொற்ப அளவிலான நிலங்களை விடுவித்தது. ஒரு சில முகாங்களை அகற்றியது. அதனை மீண்டும் ஆக்கிரமிக்கவும் நிலங்களை தொடர்ந்து இராணுவ வசம் வைத்திருக்கவும் ஈழ மண்ணில் சிங்கள இராணுவத்தை நிரந்தரமாக நிலை நிறுத்தவும் இவ்வாறான பிரசாரங்களை ராஜபக்சே தரப்பு மேற்கொண்டனர். அத்துடன் மீண்டும் புலி என்ற பிரசாரத்தை செய்து ‘நான் நாட்டை பாதுகாப்பேன்’ என்ற தொனியில் ராஜபக்சே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார்.

புலிகள் மீண்டும் உயிர்பெறவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் இனி இல்லை என்றும் இலங்கை அரசு அறிவித்தது. வடக்கில் எடுக்கப்பட்ட வெடிபொருட்களை வைத்தவர்கள் தெற்கு பேரினவாதிகள் என்று இலங்கை அரசு கூறினாலும் அந்த நிகழ்வுகளின் பின்னர் பல முன்னாள் போராளிகளை கைது செய்ததுதான் அதிர்ச்சியானது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி ராம், நகுலன், திருகோணமலை புலனாய்வுப் பொறுப்பாளர் கலையரசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டார்கள்.

வடகிழக்கில் வீடுகளுக்குள் நுழைந்த இலங்கை அரச படைப் புலனாய்வாளர்கள் கடத்தலிலும் கைதிலும் ஈடுபட்டனர். தளபதி ராம் கடத்தப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அவரை கைது செய்ததாக இலங்கை அரசு அறிவித்தது. முன்னாள் போராளிகள் மாத்திரமின்றி அப்பாவி இளைஞர்களும் முதியவர்களும்கூட கைது செய்யப்பட்டார்கள். இந்த கைதுகளால் ஈழம் மீண்டும் ஒரு போர்க் காலத்திற்குள் தள்ளப்பட்டது. அச்சமும் பதற்றமும் பரவியது.

ராஜபக்சே ஆட்சியில் கடத்தல்களாலும் காணாமல் போதல்களாலும் பல்லாயிரம் பேர இழந்தது ஈழம். அவர்களை புதிய அரசு விடுவிக்கும் என்று காத்திருந்த நிலையில் இந்த அரசும் அப்பாவி தமிழ் மக்களை பயங்கரவாத – அவசர காலச் தடைச்சட்டத்தில் கைது செய்தமை ஈழ மக்களை பெரும் கண்ணீரில் தள்ளியது. மைத்திரி ஆட்சியில் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகளை விடுக்குமாறு தாய்மார் கண்ணீர் விட்டனர். மைத்திரி ஆட்சியில் சிறையிடப்பட்ட தந்தையருக்காக குழந்தைகள் அழுதனர்.

தென்னிலங்கையில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற விடுதலைப் புலிகள் தேவைப்படுவதுடன் தமிழ் மக்களின் கைகளில் குண்டுகளும் தற்கொலை வெடிகுண்டு அங்கிகளும் திணிக்கப்படுகின்றன. தென்னிலங்கையில் உள்ள ராஜபக்சே போன்றவர்கள் தமது அரசியலுக்காக இதனைச் செய்தாலும் வடக்கில் அப்படி ஒன்றும் இல்லை என்று காட்டுவதற்காக இலங்கை அரசும் அப்பாவி இளைஞர்களையுதம் முன்னாள் போராளிகளையும் கைது செய்தது. இப்படித்தான், தென்னிலங்கை அரசியல் போட்டிக்காக தமிழ் மக்கள் பலியாக்கப்படுகிறார்கள்.

சிங்களப் பேரினவாதிகளின் அரசியல் போட்டிக்காக ஈழ மக்கள், எப்போது வேண்டுமானாலும் ஒரு போருக்குள் தள்ளப்படலாம் என்ற நிலையே இலங்கையில் நிலவுகிறது. அவ்வாறான சூழலுக்குள் ஈழ மக்களை தள்ளுவதன் ஊடாக ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, அவர்களை அழித்தொழிக்கவும் சிங்களப் பேரினவாதிகள் எண்ணுகின்றனர். அமைதிக்காவும், விடியலுக்காகவும், விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் காத்திருக்கும் – போராடும் ஈழத் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் போருக்குள் தள்ளி அவர்களை அழித்தொழிப்பதே சிங்கள தேசத்தின் இனவெறி நோக்கம்.

குமுதம்தீபச்செல்வன்போர் இன்னும் ஓயவில்லை
Comments (0)
Add Comment