மேலைத்தேய நாடுகள் ஆசியாவினை ஆக்கிரமித்து இந்தியா இலங்கை போன்ற நாடுகளை சூறையாடி மக்களை அடிமைகளாக நடத்தினார்கள் என்பது எவரும் மறந்துவிட முடியாத வடு. இந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பின் போது இந்தியாவில் பகத்சிங் மற்றும் ஈழத்தில் பண்டாரவன்னியன் போன்ற மாவீரர்கள் மக்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள்.
ஆயுத போராட்டம் பெரும் போராக வெடிக்கும் என அஞ்சியே மீசையில் மண் முட்டாத கதையாக மகாத்மா காந்தியின் அகிம்சை வழி போராட்டத்திற்கு அடிபணிந்து நாட்டினை விட்டு வெளியேறியதாக உலகுக்கு பிரித்தானியா நாடகம் ஆடியது.
எது எவ்வாறாயினும் சுதந்திரத்துக்காக தன் உடலை வருத்தி அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் மக்கள் அவரை தூக்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள். நாங்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம் என மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
ஆனால் காந்தி அதை இந்தியாவின் சுதந்திரமாக கருதவில்லை. இந்திய சுதந்திரத்துக்கு பிறகு ஒரு மேடையில் வைத்து மக்களிடம் இவ்வாறு கூறினாராம். என் அன்பு மக்களே..நாங்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து மட்டுமே விடுதலை பெற்றுள்ளோம். எமக்கு இன்னமும் முழுச் சுதந்திரம் கிடைக்கவில்லை. எம் தேசத்தில் நள்ளிரவில் கழுத்தில் தங்க நகைகளுடன் ஒரு இளம்பெண் தன்னந்தனியாக சுதந்திரமாக நடந்து செல்கிறாளோ அன்றுதான் இந்தியாவின் சுதந்திர நாள் என கூறினார்.
அன்று காந்தி கண்ட அந்தக்கனவு ஈழத்தில் நனவானது. தலைவர் பிரபாகரன் காலத்தில் ஈழத்தில் ஒரு இளம்பெண் கழுத்தில் நகைகளுடன் நள்ளிரவில் தனியாக சுதந்திரமாக நடந்து சென்றாள். அவளை யாரும் கற்பழிக்கவும் இல்லை, நகைகளை திருடவும் இல்லை. அத்தோடு உலகில் எங்கும் நடந்திராத அதிசயம் அங்கு நடந்தது. கோடிக்கணக்கான பணம் மற்றும் பெருந்தொகையான நகைகளுடன் தமிழீழ வைப்பகம் எந்தவொரு காவலாளியும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கியது.
அன்று மகாத்மா காந்தி கண்ட சுதந்திரக்கனவினை ஈழத்தில் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார். ஆனால் அதே காந்தி பிறந்த இந்தியாவின் நயவஞ்சக செயலால் ஈழத்தில் தண்ணீர் கூட அருந்தாமல் மகாத்மா காந்தியின் அகிம்சையில் போராடிய திலீபனை சாகவிட்டதும் இந்தியாவே என்பது மிகவும் வேதனையான விடையம்..