ஸ்ரீலங்காவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக மக்களின் கருத்தறியும் அமர்வு என்ற நிகழ்வு கடந்த சில மாதங்களின் முன்னர் நடைபெற்றது. மக்களின் கருத்தளை கேட்டே புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறோம் என்று காட்டுவதற்காக ஸ்ரீலங்கா அரசு அவ்வாறு செய்தது. நேற்றைய தினம் மக்கள் கருத்தறியும் குழு ஸ்ரீலங்கா அரசுக்கு தமது யோசனையை முன்வைத்துள்ளது. வடகிழக்கு தமிழ் மக்கள் முன்வைத்த எந்தக்கோரிக்கையையாவது அக் குழு கருத்தில் எடுத்ததா என்பதை இப் பத்தி ஆராய்கிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகவும் அதை மக்களின் கருத்தை கொண்டே உருவாக்கப் போவதாகவும் குறிப்பிட்டது. புதிய அரசியலமைப்பு தொடர்பான முயற்சிகள் மிக பாதிக்கப்பட்ட நிலையில் சேடம் இழுக்கிறது. கிளையை வெட்டி வெட்டி மரத்தையே வெட்டி முடித்த கதையாய் இருக்கிறது அந்த முயற்சி. இப்போது அடுத்த அரசியல் அணு குண்டை வெடிக்க வைத்திருக்கிறது ஸ்ரீலங்கா அரசு.
மக்கள்கருத்தறியும் குழு முன்வைத்துள்ள யோசனை என்பது தற்போதுள்ள ஒற்றை ஆட்சியே. ஒற்றை ஆட்சிக்குள் இப்போழுது ஸ்ரீலங்காவின் கட்டமைப்புக்கள் இருக்கின்றனவோ அப்படியே பேணுவதே அதன் யோசனை. தமிழ் மக்களின் சுயாட்சி கோரிக்கை இங்கு நிராகரிக்கப்பட்டள்ளது. வடகிழக்கு இணைப்பும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாகாண சபை ஆட்சி முறையை மீண்டும் வலியுறுத்துவதானாம் மக்கள் கருத்தறியும் குழுவின் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள்.
குறிப்பாக அரசியல் தீர்வொன்றை அதுவும்உறுதியான நியாயமான அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு தமிழ் மக்களும் சர்வதேசமும் வலியுறுத்தி வருகிறது. ஆம்.. அத்தகைய தீர்வொன்று அவசியம் என்றும் அதனை விரைவில் முன்வைப்போம் என்றும் ஸ்ரீலங்கா அரசும் சொல்லி வருகிறது. மகிந்த காலத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால் இன்று நிலமை மோசமடைந்திருக்காது என்றும் சொல்லும் மைத்திரி அரசு மகிந்த காலத்தில் முன்னெடுத்த சேடமிழுக்கும் 13ஐதான் மீண்டும் திணிக்கப் போகிறதா?
கடந்த சில மாதங்களின் முன்னர் வடக்கிழக்கில் நடந்த கருத்தறியும் அமர்வில் தமிழ் ஈழ மக்கள் வலியுறுத்திய விடயங்களை இப் பத்தி நினைவுபடுத்த விரும்புகிறது. வடகிழக்கு இணைந்த தமிழீழ மாநிலமாக வடகிழக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழர் விடுதலைக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூரவும் அவர்களுக்கு கல்லறைகள் அமைக்கவும் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் இதன்போது மக்கள் கோரியிருந்தார்கள்.
குறிப்பாக வடகிழக்கு இணைந்த மாநிலம் என்பதை தமிழ் ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வலியுறுத்தினார்கள். அது ஸ்ரீலங்காவின் கருத்தறியும் குழுவால் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட, உரிமை மறுப்பால், சமத்துவமின்மையால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு பேரினவாதத்தின் கருத்தை முன்வைப்பது பேரினவாத அதிகாரச் செயலே. இதற்கு ஏன் வடகிழக்கில் கருத்தறியும் அமர்வு நடத்தப்பட்டது.
உப ஜனாதிபதி ஒருவரை ஸ்ரீலங்காப் பாராளுமன்றம் சிறுபான்மை சமூகத்தில் இருந்து தெரிவு செய்யவும் அக் குழு பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்றும் இது பௌத்த சிங்கள நாடு என்பதையும் மக்கள் கருத்தறியும் குழு ஏற்றுக்கொள்கிறது. உப ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்றும் அதனால் சிறுபான்மை மக்களுக்கு என்ன நன்மை என்பதையும் இக் குழு கூறவில்லை.
மாகாணங்களுக்கு ஓரளவு பொலிஸ் அதிகாரம் என்று குறிப்பிடும் இக் குழு பொலிஸை கையாளும் அதிகாரம் மத்தியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அத்துடன் காணி அதிகாரத்தையும் மத்தியில் குவிக்க பரிந்துரைக்கிறது. அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியும் 13ஆவது திருத்தமுமே மக்கள் கருத்தறியும் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவைகளின் அடிப்படை .
இந்த நாட்டில் தனி நாடு கோரி ஒரு இனம் ஆயுதம் ஏந்திப் போராடியது. அந்த இனம் இனப்படுகொலையால் அழிக்கப்பட்டனர். அவர்களின் அபிலாசை என்ன என்றெல்லாம் இங்கு ஒரு துளியும் ஆராயப்படவில்லை. பௌத்த சிங்களப் பேரினவாத அரசை பாதுகாக்க பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனையை விரிவுபடுத்தி தமிழ் ஈழ மக்களின் விடுதலை தாகத்தை அழிப்பதுவே மக்கள் கருத்தறியும் குழுவின் முன்வைப்பது.
மைத்திரி அரசின் புதிய அரசியலைப்பும், மக்கள் கருத்தறியும் செயலும் பம்மாத்து விளையாட்டே. சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் தமிழ் மக்களுக்கு அவர்களின் தன்னுரிமையை வழங்கப்போவதில்லை. தம்மை தாமே ஆளும் உரிமையை அரசு தராது. தன்னுடைய பௌத்த சிங்களப் பேரினவாத நிழலில் கிடந்து அழிய வேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பு. எனவே தமிழ் ஈழ மக்கள் தம் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பு மற்றும் வாழ்வு கருதி தமது தனிநாடு கோரிய போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியது.
தமிழவன்,
செண்பகம்.
03.06.2016