மன்னார் மாவட்ட மீனவ சமூகத்தினால், நான்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இன்று அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மன்னார் மாவட்ட வளர்பிறை பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஆகியன இணைந்து இந்த கவனயீர்ப்பு அமைதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சமாச மண்டபத்திலிருந்து காலை புறப்பட்ட இந்த ஊர்வலம் மன்னார் நகர் பிரதான வீதிகள் ஊடாக மன்னார் மாவட்ட செயலகத்துக்குச் சென்று மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல்லிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனின் அலுவலகத்துக்குச் சென்று அவரிடமும் இதன் அமைப்பின் பிரதிநிதிகள் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு:
1) மன்னார் மாவட்ட கடற் பிராந்தியத்துக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய வருகை காரணமாக மன்னார் பகுதி சிறு மீன் பிடியாளர்கள் தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே இரு அரசும் உடன் பேசி தக்க தீர்வை பெற்றுத் தரவேண்டும்.
2) மன்னார் மாவட்டத்துக்கு தென் இலங்கை மீனவர்கள் அளவுக்கு மீறி வருகை தருவதால் உள்ளுர் மீனவர்கள் இதன்மூலம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3) மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் இந்த மாவட்ட உள்ளூர் சிறு மீன்பிடியாளர்கள் நாளாந்தம் தங்கள் மீன்பிடியில் பாதிப்படைவது மட்டுமல்ல தங்கள் மீன்பிடி வலைகளை இழந்து வருகின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். ஆகவே இவற்றை நிறுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
4) மன்னார் மாவட்டத்தில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் அதிகமானோர் இருந்து வருகின்றனர். ஆகவே இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுள்ளது.