இந்த இணக்கப்பாட்டுடன் புதிய அரசமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் முடிவுக்கு வந்தன. புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மகிந்த அணியினர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் சட்டம் ஒழுங்கு அதிகாரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு இறுதி செய்யப்பட்டது. வழிநடத்தல் குழுவின் 52 ஆவது கூட்டம் இது.
நேற்றுமுன்தினமும் நேற்றும் என தொடர்ச்சியாக இரு நாள்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் பங்கேற்காத சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு கீழ் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட தரப்புக்கள் இணக்கம் கண் டன என்று தெரிவிக்கப்பட்டது.
மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாகாணத்தின் முதலமைச்சரின் சம்மதத்துடனேயே நியமிக்கப்படுவார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாகாணச் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்புக் கூறுபவராக இருப்பார். எனினும் விசாரணை கள் – வழக்கு விடயங்களில் அவர் சுயாதீனமாகச் செயற்படுவார். மாகாணத்திற்குரிய பொலிஸ் ஆணைக்குழுவே, பொலிஸாரை ஆட்சேர்ப்புச் செய்யும். பொலிஸாரின் இடமாற்றம், பதவி உயர்வு வழங்குவது,
நியமனம் உள்ளிட்ட பணிகளையும் அதுவே மேற்கொள்ளும். மாகாணத்திற்குரிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை, அரசமைப்புச் சபை நியமனம் செய்யும். மாகாணத்தின் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவரும் இணைந்து முன்மொழியும் பெயர்களிலிருந்தே அரசமைப்புச் சபை மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும்.
முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இதுவிடயத்தில் இணக்கம் எட்டப்படவில்லை என்றால் இருவரும் தனித்தனியாகப் பெயர்களைப் முன்மொழிய லாம். அவர்கள் முன்மொழியும் பெயர்கள் பொருத்தமானவையாக இல்லாதபட்சத்தில் வேறு பெயர்களை முன்மொழியும்படி அரசமைப்புச் சபை கோரும். அப்போதும் திருப்தியற்ற பெயர்களே முன்வைக்கப்பட்டால், அரசமைப்புச் சபையே பொலிஸ் ஆணைக்குழுவை நியமிக்கும்.
பொலிஸ் அதிகாரம் பகிரப்படுதல் தொடர்பான விவகாரங்கள் நேற்றுடன் முற்றுப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் முழுமை பெற்றுள்ளதாக, வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அடுத்த கூட்டம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டன என்றாலும் கடந்த காலங்களில் அவை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகள் சட்டத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்தான் மாகாண பொலிஸ் அதிகாரம் உள்ளது. எனினும் அதுவும் நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.