மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலி எது?

எந்த மண்ணுக்காக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் போராடினார்களோ அந்த மண்ணிலே உறங்கக்கூட இடம் மறுக்கப்பட்ட நிலையில் அவர்தம் கல்லறைகள் சிங்கள அரச படைகளால் உடைத்தெறியப்பட்டன. இந்த நூற்றாண்டிலே நடந்த மிகப் பெரிய மனி குல அவமானமாக ஈழ இனப்படுகொலை இருப்பதைப்போலவே புலி வீரர்களின் கல்லறை அழிப்பும் மிகப் பெரிய பண்பாட்டு அவமானமாக இருக்கிறது என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள அரசின் இனப்படுகொலைகளுக்கு இன அழிப்புக்களுக்கு இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தின் கல்லறைகளை அழித்ததின்மூலம் தமிழ் ஈழச் சனங்களின் இருப்பை எந்தளவில் இல்லாமல் செய்யுமொரு இன அழிப்பு அரசு என்பதை சிங்கள அரசு உணர்த்தியிருக்கிறது. கல்லறைகள் உணர்த்தும் உண்மைகள் இவை.

தமிழீழத்தில் கல்லறைகள்தான், இன்றைய போராளிகள். அவைகள்தான் எங்கள் வரலாற்றின் முகங்கள். அவர்கள்தான் எங்கள் ஆயுதங்கள். அவர்கள்தான் எங்கள் மொழி. எங்கள் புலிவீரர் கல்லறைகள் இந்த தீவில் நடந்த இன ஒடுக்குமுறையை அதற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டத்தை உலகிற்கு எடுத்துரைக்கும். உண்மையில் அதானால்தான் சிங்களப் படைகள் கல்லறைகளை அழித்தன.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற விடுதலை இயக்கம் ஈழத் தமிழர்களின் ஆன்மாவுடன் இரண்டறக்கலந்தது. எங்கள் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக, எங்களை உலகிற்கு அடையாளப்படுத்திய விடுதலைப் புலிகள் இயக்கம்மீது கொண்ட பெரும் பற்று இன்று உலகிற்குப் புரிந்திருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத முத்திரை குத்தி அழித்த உலகிற்குப் புரிந்திருக்கும்.

எங்கள் மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்து அவற்றை துப்புரவு செய்து, வெறும் மூன்று நாட்களில் துயிலும் இல்லத்தை மீட்டெடுத்து, எம் வீரர்களின் எஞ்சிய கல்லறைகளை ப் பாதுகாத்து, அழிக்கப்பட்ட கல்லறைத் துண்டுகளில் நினைவை உலுப்பும் ஒரு நினைவுத் தூபி செய்து எங்கள் விடுதலைக்காய் மாண்ட வீரர்களை நினைவுபடுத்தி உருகியுள்ளார்கள்.

ஏழு ஆண்டுகளாக கல்லறை அழிக்கப்பட்ட சிதை நிலத்தைப் பார்க்க கூட முடியாது, அங்கு ஒரு துளி கண்ணீர்கூட விட முடியாது அல்லல்பட்டார்கள். நெஞ்சிலே பெருமூச்சு. எங்கள் வீரர்களின் விதை நிலம் தொட்டு தொழுது அவர்களின் நினைவில் உருகி செலுத்தும் அஞ்சலியின் ஊடாக ஒரு போராட்டத்தை நடத்தினர் எம் தனித்துவமான தமிழ் ஈழ மக்கள்.

விடுதலைப் புலிகள் வேறு, தமிழ் ஈழ மக்கள் வேறு என்று மலுப்பிய சிங்களமும் உலகமும் தம் முகத்தை இனி எங்கு கொண்டுபோய் வைப்பார்கள். புலிகள் எங்கள் காவல் வீரர்கள். அவர்களை நினைவுகூர்வது என்பது தமிழ் மக்களின் பண்பாட்டுப் பணி என்பதை மாவீரர் நாளில் எம் மக்கள் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். கூடவே சிங்கள தேசத்திற்கும்தான்.

இத்தகைய கால கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த இலட்சியத்திற்காக மாண்டுபோனார்களோ அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழீழ தேசமே மாவீரர்களின் கனவில் இயங்குகிறது. அந்த உண்மையைப் புரிந்து கொண்டு சீரிய வழியில் செல்லுவதே அவர்களுக்கு உகந்தது.

மாவீரர் தினத்தை கொண்டாட சிங்கள அரசு வெளிப்படையாக அனுமதி அளிக்கவில்லை. எதிர்வரும் காலத்திலும் இவ்வாறு கொண்டாட முடியும் என்று கூற இயலாது. அத்துடன் உத்தியோகபூர்வமாக அனுமதிப்பதுடன் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களையும் விட்டு சிங்களப் படைகள் வெளியேற வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்பான தகவல்களை இன நினைவழிப்பு சார்ந்த ஆதாரங்களாக இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணையின் முன் வைக்க வேண்டும். அதுவே மாவீரர்களுக்கு செய்யும் மற்றுமொரு முக்கிய அஞ்சலி. அத்துடன் இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்று, ஈழ மக்கள் அமைதியான வாழ்வை வெல்வதே மாவீரர்களை அமைதிப்படுத்தும் அஞ்சலியாகும்.

ஆசிரியர், செண்பகம். 01.12.2016

தமிழீழம்மாவீரர் துயிலும் இல்லம்மாவீரர் நாள்விடுதலைப் புலிகள்
Comments (0)
Add Comment