நம்முடைய தலைவர்களைப் பார்க்கும்போது, நவம்பர் மாத்தில் தேர்தலை நடத்தினால் என்ன என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் தேர்தல் காலத்தில் மாவீரர்களின் பெயர்களை உச்சரிக்காத அரசியல்வாதிகள் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் சிங்கள தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள்கூட தலைவர் பிரபாகரன் குறித்து பேசுவதுடன் மாவீரர்களுக்கு அஞ்சலியும் செய்கின்றனர்.
தேர்தல் காலத்தில் ஒரு முகமும் தேர்தல் முடிந்த பின்னர் இன்னொரு முகமுமாய் நமது அரசியல் தலைவர்கள் உள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். தேர்தல் காலத்தில் தமிழீழம் பற்றியும், மாவீரர்கள் பற்றியும் தலைவர் பற்றியும் போராளிகள் பற்றியும் பேசுபவர்கள் தேர்தல் முடிந்த பின்னர், அவைகளைக் குறித்து பேசக்கூடாது என்று வாயை மூடிக்கொள்கின்றனர். அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கை வைத்து அரசியல் செய்த காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் தலைவர்களின் நிலமை அப்படியே இருக்கிறது.
இது கார்த்திகை மாதம். மாவீரர்களின் காலம். எமது மக்கள் தமது உரிமைக்காக போராடி மாண்டு போன எங்கள் வீர மறவர்களை நினைவுகூறும் காலம். இந்த நாட்களில் எங்கள் மக்கள் கல்லறையின் நினைவோடும் காந்தளின் நினைவோடும் இருப்பார்கள். மாவீரர் நாள் என்றால் எங்கள் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தீபம் ஏற்றி அவர்கள் நினைவில் உருகி அவர்கள் கனவை எடுத்துரைக்கும் காலம். 2009இற்கு முன்னரான காலத்தில் தமிழீழம், மாவீரர்களின் நினைவில் உறைந்திருக்கும். எழுச்சி பெற்றிருக்கும்.
இன்று மாவீரர்களை நினைவுகூற முடியாமல் சிங்களப் படைகளின் ஆதிக்கத்தில் தமிழீழம் அடக்கப்பட்டிருக்கிறது. மாவீரர் துயிலும் இல்லங்களில் சிங்கள இராணுவம் முகாமிட்டிருக்கிறது. மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தின் பயிற்சிப் பாசறைகள். உதை பந்தாட்ட மைதானம். உரிமைக்காக போராடி மாண்டு போய் புதைக்கப்பட்டவர்களின் மயானங்களைக் கூட விட்டு வைக்காத சிங்கள அரசின் ஆட்சியை என்னவென்று சொல்வது?
தேர்தல் காலத்தில் மாவீரர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் அவர்களை நினைவுகூறும் காலத்தில் பேசுவதே அவசியமானதாகும். அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை புரிய வைக்கும் முயற்சி இதுவாகும். அதன் மூலம் அவர்களின் கனவு நனவாக பங்களிப்பு செய்யும் முயற்சி இதுவாகும். தேர்தல் காலத்தில் மாவீரர்களைப் பற்றிப் பேசுவது என்பது அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக செய்யும் அரசியலாகும்.
மாவீரர் நாட்களில் அவர்களைப் பற்றிப் பேசுவதே அவர்களின் போராட்டத்திற்குச் செய்யும் பணியாகும். எனவே இன்றைய நாட்களில் தமிழ் அரசியல் தலைவர்களின் மாவீரர்களின் தியாகங்களைப் பற்றி பேசி அவர்களை நினைவு கூருவதுடன் அவர்களின் கனவை நிறைவேற்றவும் தமது கடமையை ஆற்ற வேண்டும். இதற்காகவே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.
கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைப்போம் என்ற அரசியல்வாதிகள் எங்கே? ஆம். இத்தகைய வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை அள்ளி பதவிகளுக்கு வந்தவர்கள் சனங்கள் மாவீரர்களளை நினைந்துருக, அரசியல்வாதிகள் பதவிக் கட்டிலில் படுத்துறங்குகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். எமது மக்கள் காந்தள் மரங்களில் தமது பிள்ளைகளின் நினைவுகளை தேடுகின்றனர்.
சிங்கள அரசுக்கு ஆதரவளித்து, இணைந்து பயணிப்பவர்கள், உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போரிட்டு மாண்ட பிள்ளைகளை நினைவுகூறும் உரிமையை வாங்கித் தர இயலுமா? சுதந்திரதினத்தில் பங்கெடுக்கும் தமிழ் தலைமைகள் மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் உரிமையை பெற்றுத் தருவார்களா? சுதந்திர தினத்தில் கலந்துகொண்ட தமிழ் தலைவர்களுக்கு மாவீரர் தினத்தைக் கொண்டாடத் தான் நேரம் இல்லை. அந்தளவுக்கு ஸ்ரீலங்காவின் அரச பணி.
மாவீரர்களுக்கு துரோகம் செய்பவர்களை எமது மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதற்கு கடந்த காலமே சாட்சி. இன்றைய மாவீரர் நினைவுக் காலத்தில் அவர்களை நினைவுகூறும் உரிமையை பெறவும் அவர்களின் கனவை எடுத்துரைக்கவும் தமிழ் தலைவர்கள் தயாராக வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களு்ககு சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.
-தமிழவன்,
செண்பகம்.
19.11.2016