சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து, ஜெர்மனி வீரர் மிரோஸ்லவ் குளோஸ் ஓய்வை அறிவித்தார்.ஜெர்மனி கால்பந்து அணியின் முன்கள வீரர் மிரோஸ்லவ் குளோஸ், 36. கடந்த 2001ல் முதன்முதலில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கிய இவர், ஜெர்மனிக்காக 137 போட்டிகளில் 71 கோல்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம் அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர்கள் பட்டியலில், முன்னிலை வகிக்கிறார். சமீபத்தில் முடிந்த ‘பிபா’ உலக கோப்பை தொடரில், பிரேசிலுக்கு எதிரான அரையிறுதியில் கோல் அடித்த இவர், உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல் (16 கோல்) அடித்த வீரர்கள் பட்டியலில், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவை (15 கோல்) முந்தி முதலிடம் பிடித்தார். தவிர இவர், ஜெர்மனியின் உவே சீலர், பிரேசிலின் பீலே ஆகியோருக்கு பின், நான்கு உலக கோப்பை தொடர்களில் கோல் (2002–14, 5+5+4+2=16) அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.
இவர் கோல் அடித்த போட்டிகளில், ஜெர்மனி அணி தோல்வி அடைந்ததில்லை.நேற்று மிரோஸ்லவ் குளோஸ், சர்வதேச போட்டிகளில் இருந்து முறைப்படி ஓய்வை அறிவித்தார்.
இதுகுறித்து குளோஸ் கூறுகையில், ‘‘சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடரில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. இதன்மூலம் ஜெர்மனிக்கு உலக கோப்பை வென்று தர வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியது. தேசிய அணிக்காக விளையாடியதை என்றும் மறக்க முடியாது. சர்வதேச அரங்கில் சில தனிப்பட்ட சாதனைகள் படைத்ததும் மகிழ்ச்சி. ஆனால், கால்பந்தில் முன்கள வீரரின் பொறுப்பு கோல் அடிப்பது மட்டுமே. எனவே, சாதனைகள் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அணியின் வெற்றிக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பேன்,’’ என்றார்.