முகமாலை இத்தாவில் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றைய தினம் (2014/07/02) மீட்கப்பட்டுள்ள சடல எச்சங்கள் விடுதலைப் புலிகளுடையது என்றோ, அது பெண் ஒருவருடையது என்றோ முழுமையான முறையில் அடையாளப்படுத்த முடியாது என பளை பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இத்தாவில்- முகமாலை ஆகிய இரு கிராமங்களுக்கும் மத்தியில் கலோரஸ்ட் நிறுவனத்தினால் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கண்ணி வெடியகற்றும் தன்னார்வ பணிகள் படையினரின் கண்காணிப்புடன் நடைபெற்று வருவதுடன், இந்தப் பகுதியில் அந்தப் பணி நிறைவாக 20 வருடங்கள், கால அவகாசம் வேண்டும் என குறித்த நிறுவனம் முன்னர் அரசாங்கத்தை கேட்டிருந்தமையும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களே இன்றைய தினம் காலை கைவிடப்பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து சடல எச்சத்தை மீட்டுள்ளனர்.

மேற்குறித்த இத்தாவில்- முகமாலை ஆகிய இரு கிராமங்களுக்கிடையிலான இந்த முன்னரங்க சூனியப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ம் ஆண்டு 08ம் மாதம் முதல் தங்கள் முன்னரங்க பகுதிகளை சற்றுப் பின்னகர்த்திய நிலையில், இந்தப் பகுதி அடிக்கடி போர் நடைபெறும் இரு தரப்பினரும் முன்னகர்வுகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக இருந்தது என முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

இதனோடு மீட்கப்பட்டிருக்கும் சடல எச்சத்துடன் உள்ள உடை விடுதலைப் புலிகளுடைய சீருடையா என்பதில் சந்தேகங்கள் உள்ளதாக பொலிஸாரும், முன்னாள் போராளிகள் சிலரும் தெரிவிக்கின்றனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்து படையினர் அணியும் தலைக்கவசம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதனைவிட குறித்த எலும்பு எச்சம் பெண் போராளி ஒருவருடையதாக இருக்கலாம் என கூறப்படுகின்றமைக்கு காரணம் சடல எச்சத்துடன் ஒரு பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்றும் காணப்பட்டமையே. இதனை தவிர வேறு எவ்விதமான ஆதாரங்களும் பெண்ணுடையது என்பதை நிரூபிப்பதற்கு இல்லை.

மேலும் அக்கராயன் பகுதியில் போர் நடைபெற்ற பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களுடன் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் கழுத்தில் அணியும் தகடு மற்றும் குப்பி ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த எச்சங்களில் அவை இல்லை. இதனைவிட போர் முனைப்பு பெற்றிருந்த காலப்பகுதியில் முகமாலை முன்னரங்கப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளுடன் படையினர் நேரடியாக மோதலில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கவில்லை.

பூநகரி பகுதிக்குள் படையினர் வந்த பின்னர் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாகவே பின்வாங்கினர். எனவே காயமடைந்த அல்லது வீரமரணமடைந்த போராளிகளை கைவிட்டு செல்லவும் வாய்ப்புக்கள் அப்போது இருக்கவில்லை. எனவே இது விடுதலைப் புலிகளுடையது என்றோ, பெண் போராளியினுடையது என்றோ நிரூபிப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை 03/07/2014 அன்று யாழ். முகமாலைப் பகுதியில் இருந்து இன்று காலை மேலும் ஒரு எலும்புக் கூடு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த எச்சங்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் இந்தப் பகுதியில்  சோதனைச் சாவடி இருந்த இடம் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களே இந்த  எலும்புக்கூடுகளை மீட்டு, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனால், இப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகித்து  கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இணைந்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எச்சங்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளனபகுதியில்மனிதயாழ் முகமாலைப்
Comments (0)
Add Comment