நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. இதையடுத்து, பெங்களூர் நகரம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது 1996ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக ஊழல்தடு¢ப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அரசு அதிகாரிகள், நில உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள், பத்திரப்பதிவு துறை அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் உள்ளிட்ட 259 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
முதலில் சென்னையில் நடைபெற்ற இந்த வழக்கு திமுக பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம், பெங்களூர் தனி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றம் செய்தது. பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 313ன் கீழ் கேள்வி பதில் விசாரணை நடத்தப்பட்டது. அதையடுத்து, அரசுத் தரப்பு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுணா அறிவித்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கு செப்டம்பர் 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் தீர்ப்பு வழங்கும் இடத்தை பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைக்கு மாற்றினர்.
இதையடுத்து, இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வெளியாக உள்ளது. காலை 11 மணிக்கு நீதிபதி தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பு நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து பரப்பன அக்ரஹார சிறைச்சாலை வளாகத்துக்கு காரில் செல்கிறார். தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி பெங்களூர் நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலை வளாகம் மற்றும் அதிலிருந்து 500 மீட்டர் தூரத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர். சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூர் நகரத்துக்குள் வரும் தமிழக பதிவு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.