முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று மாலை 3 மணியளவில் ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள், கேள்விகள் எழுந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியூதீன், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள், அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம், வளச்சுரண்டல், சட்டவிரோத மீன்பிடி, பொதுமக்களது சொத்துக்களை இராணுவத்தினர் தொடர்ந்து தமது பிடியில் வைத்திருக்கினறமை உள்ளிட்ட பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, இடப்பெயர்வின் போது பொதுமக்கள் விட்டுச் சென்ற கால்நடைகளை இராணுவத்தினர் பிடித்துத் தமது பாராமரிப்பில் வைத்துள்ளனர். இவற்றை உடனடியாக பொதுக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த இராணுவத் தரப்பினர் உரிமையாளர்கள் தமது கால்நடைகளை இனங்காட்டி உறுதிப்படுத்தினால் அவை மீள ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாகாண சபை உறுப்பினர்கள் உங்களுக்கு மாடு பிடிப்பதற்கு யார் அனுமதி தந்தது. பொதுமக்களிடம் அனுமதி பெற்றா மாடுகளைப் பிடித்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதனால் இராணுவத்தினருக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்குமிடையில் பெரும் வாதம் எழுந்தது. வாதத்தைக் கைவிடுமாறு அமைச்சர் ரிசாத் கேட்டுக்கொண்டார். எனினும் பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காணாமல் அடுத்த விடயம் குறித்து பேச முடியாது என்று மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்க மாடுகளை கையளிப்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோன்றே காணி அபகரிப்பு, வளச்சுரண்டல், சட்டவிரோத மீன்பிடி போன்ற விடயங்களிலும் பெரும் வாதங்கள் இடம்பெற்றன