முள்ளிவாய்காலில் ஒரு மருத்துவப் போராளியின் இறுதி நாட்கள் – மிகுதி நாட்கள் 2

ஸ்ரீலங்கா இராணுவம் மன்னாரில் இருந்து நிலங்களை கைப்பற்றிக்கொண்டு முன்னேறி வந்துகொண்டிருக்கும் போது மக்கள் மனதளவில் நம்பிக்கையோடு முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்தனர். ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களை தங்களது கட்டுப்பட்டு பகுதிக்குள் வருமாறு அழைப்பு விடுத்தும் மக்கள் புலிகளோடு இறுதிவரை வந்தார்கள். தமிழ் மக்களுக்கு இடப்பெயர்வு பழகிப்போன ஒன்று. வழமையாக இவ்வாறு பாரிய இடப்பெயர்வுகள் வந்த போதெல்லாம் விடுதலைப்புலிகள் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டு நிலங்களை மீட்டு பல வெற்றிகளை பெற்றதால் மக்களும் அதே நம்பிக்கையில் இறுதி வரை வந்தனர்.

ஆனால் முள்ளிவாய்க்கால் யுத்தம் எவரும் கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒன்று. உலகிலேயே மிகப்பலம் வாய்ந்த ஒரு போராளி அமைப்பு தோற்கடிக்கப்பட்டதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்ரீலங்கா அரசு பெரும் வெற்றிக்களிப்பில் கொண்டாடியது. இந்தியா பெரு மூச்சு விட்டது. இந்தியாவை பொருத்தமட்டில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது அழித்து விடவேண்டும் என முடிவோடு இருந்தது.ஏனெனில் புலிகளின் வளர்ச்சி தமிழகத்தை பாதிக்கும் என இந்தியா நினைத்திருந்தது. யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆன பின்னரும் இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிகப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்கிறது.

இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் விட்ட தவறில் இருந்து நாமும் சில பாடங்களை கற்றுக்கொள்ளாததால் யுத்தத்தில் பல உயிர்களை இழந்து விட்டோம். யுத்தத்தில் தோற்றே போனோம். கடல் வழியாக எமக்குத்தேவையான அனைத்தும் கிடைக்கும் என நம்பியிருந்தது பெரும் தோல்வியில் முடிந்தது. நாமும்  சுயமாக பல உற்பத்திகளை செய்திருக்கலாம். எமக்கு கடல் வளம் இருந்தது அதை வைத்து மருத்துவத் தேவைக்கு நாளத்திரவங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையினை அமைத்திருந்தால் பெரிதும் உதவியிருக்கும்.  யுத்தம் நடக்கும் பகுதிக்கு ஐக்கியநாடுகள் அமைப்பு மருத்துப்பொருட்களையாவது அனுப்பி இருக்கலாம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையும் மௌனமாக இருந்துவிட்டது. சொல்லப்போனால் ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு விதத்தில் போர் குற்றம் புரிந்தவர்களே. ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் சாவதற்கும் இவர்களும் காரணம்.

முள்ளிவைக்காலின் இறுதி ஐந்து நாட்கள் மிக மோசமான நாட்கள். மருத்துவர்கள் சத்திர சிகிச்சை செய்ய இடம் இல்லை.. எங்கு  பார்த்தாலும் பிணங்கள். நான் எதையும் கற்பனையாகவோ மெருகூட்டியோ சொல்லவில்லை..என் கண் முன்னாள் நடந்த உண்மைச்சம்பவங்களை உங்களிடம் கூறுகிறேன். ஏனென்றால் உயிர் வலி மனிதர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக.

அந்த நேரத்தில் என் தாய் தந்தையியோ என் அன்பு தங்கையியோ நினைத்துப்பார்க்க முடியவில்லை. என் கண் முன்னாள் எத்தனையோ உயிர்கள் குற்றுயிராய்..முனுகள் சத்தம் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

காயமடைந்த மக்கள் என் கால்களை பிடித்து காப்ப்பாற்றுங்கள்  என்று கதறி அழுதது இன்றும் என்னுள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் என்னால் எதுவும் முடியவில்லை. இன்றும் அந்த குற்ற உணர்வு என்னுள்…அந்த முகங்களை என்னால் மறக்க முடியவில்லை.

என் கண் முன்னாள் எத்தனை பெண் போராளிகள் சயனைட் வில்லைகளை உண்டு மடிந்தார்கள். நான் வெறித்தபடி அவர்கள் சாவதை பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கும் அரச படைகளிடம் மாட்டிக்கொண்டால் பல கொடுமையான சித்திரவதைக்கும் பாலியில் வன்கொடுமைக்கு பின்னர் சாகவேண்டி இருக்கும். அந்த நேரத்தில் இவர்கள் எடுக்கும் முடிவு எனக்கு சரியாகத்தான் பட்டது.

மிகுதி நாட்கள் தொடரும்..

 

இனப்படுகொலைசித்திரவதைதமிழினம்பாலியல்முள்ளிவாய்க்கால்
Comments (0)
Add Comment