முள்ளிவாய்க்காலில் ஒரு மருத்துவப் போராளியின் இறுதி நாட்கள் – இன்று இறுதி நாள் மே 18

இறந்து கிடந்த ஒரு பெண்ணின் அருகில் இருந்த கஞ்சியை ஒரு சிறுமி பசி தாங்க முடியாமல் எடுத்து குடித்துக்கொண்டிருந்தாள்..

யுத்தம் நடக்கும் பகுதியில் மக்கள் பட்டினியால் வாடினார்கள். ஆங்காங்கே மக்களுக்கு அரிசிக்கஞ்சி கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இதனால் ஓரளவு மக்கள் தாக்கு பிடித்தார்கள். ஆனாலும் எத்தனை நாட்களுக்கு தாக்குபிடிப்பது. மிகவும் கொடுமை என்ன வென்றால் எந்த தொண்டு நிறுவனமும் யுத்தம் நடக்கும் பகுதில் இல்லை. ருவாண்டாவில் மக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு கைவிட்டு சென்றதை போல இங்கும் அப்படிதான் செய்தது.

உலக பணக்கார நாடுகளுக்கு தேவை இருந்தால் தான் உதவுவார்கள். இல்லையெனில் நாமும் அவர்களுக்கு தெரு நாய்கள் தான்.

வழமை போல் இலைக்கஞ்சி மக்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலின் சந்தியிலிருந்து நூறு மீட்டர் இருக்கும். ஒரு வேப்பம் மரத்துக்கு கீழ் ஒரு கொட்டகையில் வைத்து அரிசிக்கஞ்சு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஸ்ரீலங்கா அரசு ஏவிய பல்குழல் எறிகணைகள் அந்த பிரதேசத்தில் வீழ்ந்து வெடித்தது. இலைக்கஞ்சி கொடுத்த இடத்திலும் ஒன்று வீழ்ந்து வெடித்தது. அதில் பதின் மூன்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதில் மிகவும் கொடுமையான பார்க்க கூடாத சம்பவம்  இறந்து கிடந்த ஒரு பெண்ணின் அருகில் இருந்த கஞ்சியை ஒரு சிறுமி பசி தாங்க முடியாமல் எடுத்து குடித்துக்கொண்டிருந்தாள்.அவள் தனது உயிரை பற்றி அந்த நேரத்தில் சிந்திக்கவில்லை பசி மட்டுமே அவளுக்கு தெரிந்தது. நான் ஓடிச்சென்று அந்த சிறுமியை தூக்கிச்சென்று அருகில் இருந்த பதுங்குக்குழிக்குள் விட்டுவிட்டு அந்த கஞ்சியையும் கொடுத்து விட்டு வெளிய போகவேண்டாம் என எச்சரித்துவிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் வேலையை பார்த்தேன்.

இறுதியாக இருந்த தற்காலிக மருத்துவ மனைக்கு, ஒரு பெண் ஒரு கையில் குழந்தையை தூக்கிக்கொண்டு இன்னொரு கையில் தனது சாரியினால் வயிற்றிலிருந்து வெளியே வந்திருந்த குடலினை பிடித்தபடி எந்த வலியும் தெரியாமல் வேகமாக வந்தார். பெண் தாதிகள் ஓடிச்சென்று அந்தத்தாயை பிடித்த போது அவர் என் மகளுக்கு காலில் காயமா என பாருங்கள் என்று குழந்தையை கொடுத்தார். தனக்கு குடல் வெளியே வந்த வலியை விட பிள்ளைக்கு ஏதும் நடந்ததோ எனத்தான் பதட்டத்தில் இருந்தார். நாட்கள் இரத்த வெள்ளத்தில் கழுவப்பட்டுக்கொண்டிருந்தது.

இறுதி நாளான 18.05.2009 இன்று அதிகாலை விடுதலைப் புலிகளின் ஒரு தொகுதியினர் நந்திக்கடல் ஊடாக கடப்பதற்கு பெரும் தாக்குதலை தொடுத்தவாறு முன்னோக்கி சென்றுகொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க ஸ்ரீலங்கா இராணுவத்தின் பல்குழல் பீரங்கிகள் ஒன்றல்ல இரண்டல்ல பல பீரங்கிகள் ஒரே நேரத்தில் நந்திக்கடல் மீது மிகப்பெரும் தாக்குதலை நடத்தினர்.

நிலப்பரப்பு மிகவும் குறுகி விட்டது.கிட்டத்தட்ட ஒரு சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் மக்களும் நந்திக்கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் அணிகளும் இருந்ததால் ஸ்ரீலங்கா இராணுவத்தால் செறிவான தாக்குதலை மக்கள் இருந்த பகுதிக்கு நடத்த முடியவில்லை.ஏனினில் இராணுவம் சூழ்ந்திருந்ததால் அவர்களது தாக்குதல் எதிரில் உள்ள இராணுவம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.( Cross Fire) மே 18 வரை ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகம்.

இந்தப்படுகொலை நீதி வேண்டி பல போராட்டங்களை உலகத் தமிழர்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர். உலகை பொறுத்தவரை நாம் தெரு நாய்களாகவே அவர்களது கண்ணனுக்கு புலப்படுகிறோம். நாம் ஒற்றுமையாய் ஒரே குரலில் உலகுக்கு பறை சாற்றும் வரை எவரும் நீதிவழங்க போவதில்லை.

இராணுவம்தமிழர்கள்படுகொலைமருத்துவப் போராளிமுள்ளிவாய்க்கால்யுத்தம்
Comments (0)
Add Comment