முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதி உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கில் உள்ள 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் நாளை மேற்கொள்ளவிருந்த நில அளவை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விண்ணப்பத்திற்கு இணங்க, காணி சுவீகரிப்பு அதிகாரியின் கட்டளையின் பிரகாரம் இந்த நில அளவை இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. நாளைய தினம் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் தயாராகியிருந்தனர். குறித்த காணிகளை அளவீடு செய்யும் பட்சத்தில் முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகம் மக்களால் முற்றுகையிடப்படும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் காணி சுவீரித்தலை பிற்போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வொறெனினும் காணி சுவீகரித்தல் பிற்போடப்பட்டுள்ளது என்றே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காணி சுவீகரித்தலை அரசு கைவிடவேண்டும் என்றும் மக்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை நாளை மாலை முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் முள்ளிவாய்க்கால் காணிப் பிரச்சினை தொடர்பில் காணிக்குச் சொந்தமான மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு அபகரிப்புக்கு எதிரான போராட்டம்!
இதேவேளை கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி இவ்வாறு நில அளவை செய்ய முற்பட்டபோது, வட்டுவாகல் பகுதியை முற்றுகையிட்டு மக்கள் மாபெரும் எதிர்ப்பை மேற்கொண்டனர். சுமார் 250 வரையிலான காணி உரிமையாளர்கள் கடற்படை முகாமின் முன்பாக ஒன்றுகூடியிருந்தனர். இவர்கள் தமது காணிகளை அபகரித்துள்ளமைக்கும் நரந்தரமாக சுவீகரிப்பதற்கும் எதிர்ப்பு வெளியிட்டனர்
அத்துடன் முல்லை – பரந்தன் வீதியை இடைமறித்து காணியை சுவீகரிக்கும் அளவையை நிறுத்துமாறு கோரி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக நில அளவை கைவிடப்பட்டது. இதனால் குறித்த பகுதி ஊடான போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இந்தப் போராடடத்தில் மக்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நில அளவை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறும் மக்கள் கடற்படை வசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுவீகரிக்க காணிகளை மீண்டும் அளவீடு செய்ய அதிகாரிகள் தீர்மானித்திருந்தனர்.
சுமார் 500 குடும்பங்களின் நிலம்
வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலைகின்றனர்.
முல்லைத்தீவிலிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர்