ஸ்ரீலங்காவில் புதிய அரசாங்கள் பதவியேற்ற பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலப் பகுதிகளில் சில பகுதிகள் மீள கையளிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீலங்காவில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தமிழர்களின் விடயத்தில் கையாளும் போக்கு என்பது ஒரு வகையான அரசியல் நடவடிக்கையாகவே முன் எடுக்கப்படுகின்றது. தமிழர்களின் நிலங்களை விடுவித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் போக்கு இதில் இல்லை என்ற சந்தேகம் தமிழர் மத்தியில் காணப்படுகின்றது.
இன்றைய ஸ்ரீலங்கா அரசின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க சில ஆண்டுகளின் முன்னர் வலி வடக்கில் நடந்த நிலமீட்புப் போராட்டத்தில் பங்கெடுத்தார். அன்று தமிழர்களின் வாக்குப் பலத்தை பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்காக உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ரணில் இதய சுத்தியுடன் அன்று கலந்து கொண்டிருந்தால் இன்று தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுத்திருப்பார்.
ஸ்ரீலங்காவின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தெற்கில் முன்னெடுத்த விடயங்களுக்கு ஈடாக வடகிழக்கில் எதையும் செய்யவில்லை. வாக்குறுதி அளித்த அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தில் அமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட அரசாங்கம் அந்த மக்களை தனது அரசியல் நோக்கம் கருதி கையாள்வது மிகவும் துயரமானது. குறிப்பாக நில விடயத்தில் மைத்திரி அரசு முன்னெடுக்கும் அரசியல் அபாயகரமானது.
அண்மையில் வலி வடக்கு மக்கள் தங்கியிருக்கும் அகதி முகாம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கா அரச தலைவர் சென்றிருந்தார். அங்கு மக்களுடன் உரையாடுகின்ற குழந்தைகளுடன் உரையாடுகின்ற புகைப்படங்கள் ஊடகங்கள் மத்தியில் மிகவும் புல்லரிக்கின்ற விடயமாக பேசப்பட்டது. குறிப்பாக ஆறு மாத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் ஊடகங்கள் கொண்டாடின.
முதலில் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் வலி வடக்கு மக்களும் அவர்கள் சார்ந்த அமைப்பும் பல்வேறு போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்த நிலையில் அந்த மக்களின் நிலமை அன்றுதான் மைத்திரிக்கு தெரிந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். உண்மையில் மைத்திரி வடகிழக்கின் ஜனாதிபதியாக இருந்திந்தால் இந்த தாமதத்தை செய்திருக்க மாட்டார்.
அத்துடன் அந்த முகாமில் வைத்துக்கூறுகின்றார் ஆறு மாதங்களின் பின்னர் நடவடிக்கை எடுப்பேன் என்று. தன்னுடைய அதிகாரத்தை வைத்து தன்னுடைய அரசின் அதிகாரத்தை வைத்து உடனடியாக அந்த மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என்றால் அதன் அரசியல் என்ன? 25 வருடங்களுக்கு மேலாக அகதி முகாங்களில் காத்திருக்கும் மக்களுக்கு ஒவ்வொரு கணமும் நரகமானவை. அறு மாதங்கள் காத்திருக்கச் சொல்வது எப்படியான அநியாயம்?
அடுத்து ஆறு மாதங்களின் பின்னர் அந்த மக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன் என்றுதான் மைத்திரி கூறினாரே தவிர ஆறு மாத்தில் உங்களை உங்கள் சொந்த நிலத்தில் குடியிருத்துவேன் என்று தெரிவிக்கவில்லை. மாற்று இடங்களில் குடியிருப்பதாக இருந்தால் அந்த மக்கள் 25 வருடங்கள் காத்திருந்திருக்கத் தேவையில்லை. அவர்கள் தங்கள் சொந்த நிலம் வேண்டும் என்றே கடந்த 25 வருடங்கள் போராடுகிறார்கள்.
தற்போது ஸ்ரீலங்கா அரசு சுமார் 700 ஏக்கர் நிலத்தை விடுத்திருக்கிறது. இதனால் சுமார் 500 குடும்பங்கள் மீள்குடியேறலாம். இதுவரையில் 1700 ஏக்கர் நிலத்தை விடுத்திருக்கிறது. முகாங்களில் இன்னமும் 5000பேர் வரையில் அகதிகளாக உள்ளனர். ஏனைய 3300 ஏக்கர் காணி விடுவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்..
வலி வடக்கில் மைத்திரி அரசு பொங்கல் கொண்டாட தயாராகி வருகிறது.
வலி வடக்கில் பொங்கல் கொண்டாடுவதன் ஊடாக வலி வடக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக காட்டுவதே இதன் நோக்கம். வலி வடக்கு மக்களின் பிரச்சினை சர்வதேச அளவில் பேசப்பட்ட விடயம். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் இந்த முகாங்களுக்கு சென்று மக்களின் நிலவரங்களைப் பார்வையிட்டிருந்தார். அத்துடன் சர்வதே ஊடகங்கள் பலவும் வலி வடக்கு மக்களின் நிலவரத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத் தொடரை வைத்தே மைத்திரி அரசாங்கம் வலி வடக்கு மக்களின் துயரத்தில் அரசியல் செய்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்மீதான சர்வதே அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுபடவே இவ்வாறு சில பகுதிகளை விடுவித்து மக்களை தொடர்ந்து அகதிகளாக வைத்திருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினையை உண்மையான அக்கறையுடன் அணுகியிருந்தாலோ அல்லது உண்மையில் தமிழ் மக்களையும் தன்னுடைய பிரசைகளாக கருதியிருந்தாலோ நிலங்களை விடுவிக்கும் விடயத்தில் அரசியல் செய்திருக்காது. தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் பிரசைகளாக இருந்திருந்தால் மகிந்த ராஜபக்சவுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் அஞ்சி தமிழர்களின் நிலத்தில் இராணுவத்தை மைத்திரி அரசாங்கம் வைத்திருக்காது.
தமிழவன்