மைத்திரி சுமூகமாக யாழ் வந்துசெல்லும் கடைசி சந்தர்ப்பம் இதுவே!

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4ம் திகதி புதன்கிழமை வருகை தரும் இலங்கை ஜனாதிபதி சுமூகமாக வந்து திரும்ப இதுவே கடைசி சந்தர்ப்பம். அடுத்த முறை அவர் வருகை தரும் போது தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்களினை நிறைவேற்றக்கூடிய தீர்வு ஒன்றினை அரசியல் யாப்பின் ஊடாக முன்வைக்க தவறியிருந்தால் நிச்சயம் அவரிற்கு இவ்வாறான மகிழ்ச்சியான பயணம் இருக்காது. நிச்சயமாக எமது எதிர்ப்பினை யாழ்ப்பாணத்தினில் வெளிப்படுத்துவோமென தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில் தமிழ் மக்களது வாக்குகளால் ஜனாதிபதி கதிரையேறிய மைத்திரி தற்போது அரசியல் யாப்பினை மல்வத்த பீடாதிபதிகளிடம் முன்வைத்து அங்கீகாரம் பெறப்போவதாக தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கதிரை ஏறும் போது மைத்திரிக்கு தெரிந்திருக்கவில்லையாவெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேவேளை தனித்தமிழீழத்திற்கு ஆணை கேட்டு வெற்றி பெற்று பின்னர் மாவட்ட சபையுடன் அடங்கிப்போன முன்னாள் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்களிற்கு பின்னர் நடந்ததை தற்போதுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ளவேண்டுமெனவும் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர்கள் தமிழ் மக்களிற்கு இழைத்த துரோகத்தின் விளைவுதான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க காரணமாக இருந்தது. இந்த தவறை தற்போதுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இழைக்கமாட்டார்களென நம்புகின்றேன்.
இந்த அரசியல் யாப்பில் தமிழ் மக்களது விருப்பங்கள் நிறைவேறுகின்றதாவென்பது முக்கியமாக அவதானிக்கப்படவேண்டும். இதைவிடுத்து சுரேஸ்பிறேமச்சந்திரன் சொல்வது போல் தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பினர் ஈடுபட்டுவிட்டு பின்னர் வருந்துவதில் பங்கெடுக்க மாட்டார்களென நம்புகின்றேன்.
இந்த அரசின் உத்தேச அரசியல் யாப்பிற்கு ஆதரவளித்தோமென்றால் அது வரலாற்று துரோகமாகிவிடும். அத்துடன் இவ்வளவு காலமும் எமது மக்கள், இளைஞர்கள் ஆயிரமாயிரமாக போராடி செய்த தியாகங்களிற்கு ஏதுமே இல்லாதாகிவிடுமெனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசுகூட்டணிகூட்டமைப்புசிவாஜிலிங்கம்சுரேஸ்பிறேமச்சந்திரன்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment