யாழில் பொங்குவதால் நல்லிணக்கம் ஏற்படுமா? தமிழவன்

ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னுடைய தேசிய பொங்கல் விழாவை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்த தீர்மானித்திருக்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமானதொரு நாளாகும். இந்தப் பண்டிகை நாளில் யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவை நடாத்துவதன் ஊடாக ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்புகிறதா?

உண்மையில் ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் என்ற சொற்பதத்திற்கு உள்ள அர்த்தம் அந்த சொல்லின் உண்மையான அர்த்திதற்கு நேர்மாறானது. ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழர் இனப்படுகொலையாளியுமான ராஜபக்ச தனது இன அழிப்புச் செயல்களை மூடி மறைக்க நல்லிணக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதுடன் இன அழிப்புச் செயல்களை நல்லிணக்கம் என்றும் அர்த்தப்படுத்தியிருந்ததை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

ஸ்ரீலங்காவின் இன்றைய அரசான நல்லாட்சி அரசு என்று தன்னை அழைக்கும் அரசும் ராஜபக்ச காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கம் என்ற சொற்தொடரைப் பயன்படுத்துகிறது. தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள், சமகாலப் பிரச்சினைகள் என்று பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் ராஜபக்ச காலத்தில் நடந்த பல பிரச்சினைகள் இன்னும் தொடரும் நிலையில் நல்லிணக்கம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

“இனப்படுகொலையாளியுமான ராஜபக்ச தனது இன அழிப்புச் செயல்களை மூடி மறைக்க நல்லிணக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதுடன் இன அழிப்புச் செயல்களை நல்லிணக்கம் என்றும் அர்த்தப்படுத்தியிருந்ததை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.”

குறிப்பாக ராஜபக்ச நல்லிணக்கம் என்ற பெயரில்தான் தமிழ் ஈழ மண்ணில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்தார். தமிழ் ஈழருடன் சிங்களவர்களை கலப்பதும் அவர்களின் தனித்துவத்தை அழிப்பதும் தாயகத்தை அபகரிப்பதும் ஷதான் ராஜபக்சவின் நல்லிணக்கம். ஆனால் இன்றைக்கும் தமிழ் ஈழ மண்ணில் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவை புதிய அரசினாலும் தடுத்து நிறுத்தப்படவில்லை.

தமிழர்களோ ஏராளம் பிரச்சினையுடன் விடுதலையற்ற, உரிமையற்ற இனமாக வாழ்கின்றனர். சொந்த நிலத்திற்குத் திரும்ப இயலாத அகதிகளாக, விடுதலை பெற முடியாத சிறைக்கைதிகளாக, காணாமல் போனவர்களாக கொல்லப்பட்டவர்களாக, காணாமல் போனவர்களுக்காய் அலைபவர்களாக கொல்லப்பட்டவர்களுக்காய் நீதி கோருபவர்களாக பல வகையில் தமிழ் ஈழர் வாழ்வு துயரத்தில் தத்தளிக்கிறது.

இந்த நிலையிலேயே நல்லாட்சி அரசின் யாழ் பொங்கல் நிகழ்வும் நல்லிணக்கப் பொங்கல் என்ற பெயரில் வெறும் சொல் அரசியலாக நடைபெறவுள்ளது. தன்னை காப்பாற்றும் செயல்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபடும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று. பிரித்தானிய வெளியுறவு ராஜாங்க அமைச்சர் இந்தப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வது தனக்கு கௌரவம் என்று சொல்லியிருப்பதன் பின்னணியும் இதுதான்.

“சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழர்களுக்கு தனியான ஒரு ஆட்சியமைப்பை வழங்குவதன் ஊடாகவே உரிமைகளை சமப்படுத்த இயலும்.”

நல்லிணக்கம் என்பது உரிமைகளை சமத்துவமாக்குவதில் தங்கியிருக்கிறது. சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழர்களுக்கு தனியான ஒரு ஆட்சியமைப்பை வழங்குவதன் ஊடாகவே உரிமைகளை சமப்படுத்த இயலும். பெரும்பான்மைக்கு சிறுபான்மை அடிமையாக்கப்படுவதும் பெரும்பான்மை சிறுபான்மையை விழுங்குவதும்தான் நல்லிணக்கம் என்று ஸ்ரீலங்கா அரசு கருதுகிறது.

ஸ்ரீலங்காவுக்கு இப்போது பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது. இனி தமிழர்களின் மண்ணில் ஸ்ரீலங்கா அரசு செய்யும் எல்லாமும் நல்லிணக்கத்திற்கானதே. பொங்கல் விழாக்களை நடத்தி இவ்வாறு நல்லிணக்கம் என்ற வெறும்சொல்லால் அரசியல் செய்ய ஸ்ரீலங்கா அரசு முயல்வது தமிழ் ஈழரை மேலும் மேலும் காயப்படுத்தும் செயலும் எதிர்கால விளைவு மிக்க நடவடிக்கையுமாகும்.

தமிழர்கள்மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை மறைக்கும் செயல்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனப்படுகொலைமீதே நல்லாட்சி அரசின் பொங்கலும் நடைபெறுகிறது. ஆனாலும் சிங்களப்பேரினவாதம் உள்ளவரையில் தமிழ் ஈழர் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை எளிதில் மறையாது. தமிழ் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் நீதியின் அடிப்படையில்தான் எமது விடுதலை தங்கியிருக்கிறது.

தமிழவன்
15/01/2016

தமிழ் ஈழர்தைப்பொங்கல்நல்லிணக்கம்போராட்டம்மைத்திரி
Comments (0)
Add Comment