வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆஸ்திரேலிய பன்னாட்டு அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ற தலைமையிலான குழுவினருக்கும் இடையே முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் முடிவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஆஸ்திரேலிய அரசால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் முன்னெற்றம் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காகவே யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததாக அமைச்சர் குழுவினர் என்னிடம் தெரிவித்தனர். வடக்கு மாகாண நிலமைகள் குறித்து கேட்டறிவதற்காக என்னையும் அவர்கள் சந்தித்தனர். இதன்போது 3 முக்கியமான விடயங்களை ஆராய்ந்தோம்.
வடக்கு மாகாண சபையின் தற்போதைய அபிவிருத்தி தொடர்பான நிலமைகள் எவ்வாறான முன்னேற்றத்தில் இருக்கின்றன, புலம் பெயர்ந்த நாடுகளை சேர்ந்தவர்களின் பொருளாதார முதலீடுகள் எவ்வாறான நிலமையில் இருக்கின்றன, போருக்குப் பின் உளரீதியான முன்னேற்றத் தில் மக்கள் எந்த நிலையில் உள்ளனர் போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம்.
எமது பெண்களின் பாதுகாப்பு நிலமை எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாக எங்களுடன் கலந்து கொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆஸ்திரேலியப் பிரதிநிதிகளுக்கு விளக்கங்களை வழங்கினார். “தமிழ் பெண்களுக்கு இன்றுவரை பாதுகாப்பு இல்லாத தன்மையே காணப்படுகின்றது. வறுமைக் கோட்டுக்குக் கீழேயே அதிகளவான பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பல சிக்கல்களால்தான் இந்த நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளிடம் தமிழ் மக்கள் தஞ்சம் கோருகின்றனர். உங்கள் நாட்டில் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்துங்கள்” என்று அனந்தி சசிதரன் வலியுறுத்தினார். எனினும் இந்த விடயம் தொடர்பாக அந்த நாட்டுப் பிரதிநிதிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கொழும்பில் வைத்து யாராவது வடக்கு மாகாண சபையைப் பற்றி அவர்களிடம் குறையாக கூறினார்களோ தெரியவில்லை. வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்குகின்ற நிதியை முழுமையாக செலவு செய்வதில்லை என்றும் நிதி திரும்பி போகின்றதா? என்றும் ஆஸ்திரேலிய அமைச்சர் என்னிடம் கேட்டார். மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து ஒரு சிறு தொகை பணம் கூட திரும்பிச் செல்வதில்லை. மாகாண சபைக்கு மேலதிகமாக இன்னும் நிதி தேவை யாகவே உள்ளது என்று அவருக்குப் பதிலளித்தேன்.
எமது மக்களுக்கு சுழல் நிதியம் ஒன்றை ஏற்படுத்தி ஒரு தொகை பணத்தை வழங்குவதன் ஊடாக மக்கள் தமது வாழ்வாதாரத்தை வளர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு அவர்கள் வாழ்வாதாரத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து சிறிய தொகைகளாக மீண்டும் அந்த நிதியை செலுத்தக்கூடியதாக அமையும் என்று ஆஸ்திரேலியப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தேன். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை.
மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளும் சூழ்நிலையில் எமது பிரதேசங்களில் ஏராளமான இராணுவத்தினரை நிலைகொள்ள வைத்திருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என்றும் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் சுட்டிக்காட்டினேன் – என்றார் முதலமைச்சர்.