இந்தியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் சேஸ் சதத்தால் தோல்வியில் இருந்து தப்பியது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களும், இந்தியா 500 ரன்களும் (டிக்ளேர்) எடுத்தன. 304 ரன்கள் பின்தங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சின் தொடக்கத்தில் திணறியது. மழைக்கு மத்தியில் வெறும் 15.5 ஓவர் மட்டுமே வீசப்பட்ட 4–வது நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 48 ரன்களுடன் பரிதவித்தது. மழை பெய்யாமல் இருந்திருந்தால் 4–வது நாளிலேயே இந்திய வீரர்கள், வெஸ்ட் இண்டீசை சுருட்டியிருப்பார்கள்.
என்றாலும் எஞ்சிய விக்கெட்டுகளை 5–வது நாளில் சீக்கிரம் வீழ்த்தி வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நாளான நேற்று முன்தினம் வருணபகவானின் இடையூறு இன்றி ஆட்டம் நடந்தது. இக்கட்டான நிலைமையிலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். வெயில் வாட்டி வதைத்த இறுதி நாளில் ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. இது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக போய் விட்டது.
குறிப்பாக இளம் வீரர் ரோஸ்டன் சேஸ் அமர்க்களப்படுத்தினார். தடுப்பாட்டத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், அதிரடி காட்டவும் அவர் தயங்கவில்லை. அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்ட அவர் ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். அவர் மட்டுமல்ல பிளாக்வுட் (63 ரன், 54 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூ. தீர்ப்புக்கு இரையானான விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச் (74 ரன், 114 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் ஜாசன் ஹோல்டர் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியின் பிடியில் இருந்து படிப்படியாக மீண்டது. 29 ஓவர்கள் எஞ்சியிருந்த போது புதிய பந்து எடுக்கப்பட்டது.
புதிய பந்திலும் நமது பவுலர்களால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 2–வது இன்னிங்சில் 104 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 388 ரன்கள் குவித்து இருந்த போது இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது. ரோஸ்டன் சேஸ் 137 ரன்களுடனும் (269 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹோல்டர் 64 ரன்களுடனும் (99 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் முகமது ஷமி, அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த டெஸ்டில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு:– *கிங்ஸ்டன் சபீனா பார்க் ஸ்டேடியத்தில் 1998–ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 15 டெஸ்டுகளில் முடிவு கிடைத்தது. கடந்த 18 ஆண்டுகளில் ‘டிரா’ ஆன முதல் டெஸ்ட் இது தான்.
*தொடர்ச்சியாக 16 இன்னிங்ஸ்களுக்கு பிறகு எதிரணியை இந்திய பவுலர்கள் ஆல்–அவுட் ஆக்காத இன்னிங்சாக இது அமைந்தது.
*வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5, 6, 7, 8–வது வரிசை பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
*முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் பின்னடைவை சந்தித்த பிறகு அந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியில் இருந்து மீள்வது இது 5–வது நிகழ்வாகும்.
*சதம் அடித்த 24 வயதான ரோஸ்டன் சேஸ் முதலாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஒரே டெஸ்டில் சதத்துடன், 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் கைப்பற்றிய 4–வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை ரோஸ்டன் சேஸ் பெற்றார். இதற்கு முன்பு 1955–ம் ஆண்டு டெனிஸ் அட்கின்சனும், 1959–ம் ஆண்டு கோலி சுமித்தும், 1962, 1966–ம் ஆண்டுகளில் கேரி சோபர்சும் (இரண்டு முறை) இச்சாதனையை செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆவர். தொடரில் இந்திய அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 3–வது டெஸ்ட் போட்டி வருகிற 9–ந்தேதி செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.
‘100 ஓவர்களை இழந்ததால் வெற்றி பெற முடியவில்லை’– கும்பிளே
வெற்றியின் விளிம்பில் இருந்து போட்டி ‘டிரா’ ஆனதால் இந்திய வீரர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே அளித்த பேட்டியில், ‘இந்த டெஸ்டில் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். 4–வது நாளில் நாங்கள் மிகச்சிறந்த நிலையில் இருந்தோம். ஆனால் தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டு வெஸ்ட் இண்ட்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் பாராட்டுக்குரியது.
ரோஸ்டன் சேஸ் கடைசி நாள் முழுவதும் பேட் செய்து தங்கள் அணியை காப்பாற்றி இருக்கிறார். அவரது அணுகுமுறை மிகவும் நன்றாக இருந்தது’ என்றார். நான்காம் நாள் தான் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. ஏனெனில் அப்போது எங்களது பவுலர்கள் முழு உத்வேகத்துடன் இருந்தனர். சூழலும் சாதகமாக காணப்பட்டது. அன்றைய தினம் தொடர்ந்து பந்து வீசியிருந்தால் முடிவு எங்களுக்கு சாதகமாக கிடைத்திருக்க கூடும். மழை காரணமாக இந்த டெஸ்டில் ஒட்டுமொத்தமாக 100 ஓவர்களுக்கு மேலாக இழந்திருக்கிறோம். அது தான் இங்கு விஷயம்’ என்றார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில், ‘எல்லா புகழும் ரோஸ்டன் சேசுக்கே கொடுக்கப்பட வேண்டும். அவருக்கு இது 2–வது டெஸ்ட் தான்.
நெருக்கடியான சூழலில் அவர் விளையாடிய விதம் அருமை. இதே போன்று தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன். இந்த இன்னிங்சில் 3 பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம்’ என்றார்.