லக்ஸம்பர்க்கை வீழ்த்தியது நடப்புச்சம்பியன் ஸ்பெயின்

2016 யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், லக்ஸம்பர்கை வீழ்த்தியது. எஸ்தோனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

2016 யூரோ கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன.

குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணி, முதல் ஆட்டத்தில் ஸ்லோவேகியாவிடம் தோல்வியடைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஸ்பெயின் அணி லக்ஸம்பர்கை எதிர்கொண்டது.

டேவிட் சில்வா, பேகோ அல்கசர் முதல் பாதியில் தலா ஒரு கோல் அடிக்க ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் டீகோ கோஸ்டா ஒரு கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணி சார்பில் அவர் அடிக்கும் முதல் சர்வதேச கோல்.

மாற்று வீரராகக் களமிறங்கிய ஜுவான் பெர்னட் ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடங்களுக்கு முன் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை லக்ஸம்பர்க் கோல் அடிக்கவில்லை. முடிவில் 4-0 என ஸ்பெயின் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தும் எஸ்தோனியாவும் மோதின. 17-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த ஃப்ரீ கிக்கை கேப்டன் வெய்ன் ரூனி கோலாக மாற்றினார். இது அவர் அடிக்கும் 43-வது சர்வதேச கோல். இதன் மூலம் இங்கிலாந்து 1-0 என வெற்றி பெற்றது.

தகுதிச் சுற்றின் முதல் மூன்று ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

2016இங்கிலாந்துஉலகம்கால்பந்துகோப்பைதகுதிநகரம்நடப்பு சாம்பியன்யூரோலக்ஸம்பர்க்கைஸ்பெயின்
Comments (0)
Add Comment