விம்பிள்டன் ஆடவர் இறுதிச்சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 6-7 (7), 6-4, 7-6 (4), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கோப்பையை வென்றார். இது, அவருடைய 2ஆவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லமாகும். மொத்தம் 7 கிராண்ட்ஸ்லாம்களை அவர் வென்றுள்ளார். லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியின் மகளிர் இறுதிச்சுற்று ஒருதலைப் பட்சமாக அமைந்தது. ஆனால், ஆடவர் போட்டியில் 5 செட் வரை வெற்றி இருவருக்கும் சமமாகவே இருந்தது. இறுதியில் லேசாக தொய்வு அடைந்த ஃபெடரர், கோப்பையை இழக்க நேரிட்டது.
இந்த ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. கடந்த மாதம் பாரிஸில் (பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் அவர் தோல்வி அடைந்தார்) பெற்ற ஏமாற்றத்தை லண்டனில் தீர்த்துக் கொண்டார் நோவக். 4ஆவது செட்டிலேயே, சாம்பியன்ஷிப் புள்ளியைப் பெறுவதற்கான வாய்ப்பு ஜோகோவிச்சுக்கு கூடி வந்தது. அந்த செட்டில் மிகவும் பின்னிலையிலிருந்த ஃபெடரர், தொடர்ச்சியாக புள்ளிகளை வென்று இறுதியில் அந்த செட்டையும் வென்றார். இதனால், இறுதி செட் மீதான எதிர்பார்ப்பு கூடியது.
2012ஆம் ஆண்டு விம்பிள்டனுக்குப் பிறகு வறட்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஃபெடரர், இம்முறை பட்டம் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு ஜோகோவிச் வாய்ப்பு அளிக்கவில்லை. தோல்வி பெற்றும் புன்னகையுடனே பேட்டி அளித்த ஃபெடரர், ரசிகர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு அடுத்த ஆண்டு சந்திப்பதாகத் தெரிவித்தார். மகிழ்ச்சியில் திளைத்த ஜோகோவிச், கடும் சவால் அளித்த ஃபெடரருக்கு நன்றி கூறிக் கொண்டார்.
மேலும், தனக்கு டென்னிஸ் கற்றுத் தந்த பயிற்சியாளர், தனது எதிர்கால மனைவி மற்றும் குழந்தைக்கு கோப்பையை அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறினார். கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் தொடர்ச்சியாக தன்னைப் பின் தொடர்ந்துவந்த தோல்வியை புல்தரையில் ஜோகோவிச் விரட்டியடித்தார்.
அதிகமுறை கிராண்ட் ஸ்லாம் வென்றவர்கள்…
ரோஜர் ஃபெடரர் ஸ்விட்சர்லாந்து 17
பீட் சாம்ப்ராஸ் அமெரிக்கா 14
ரஃபேல் நடால் ஸ்பெயின் 14
ரே எமெர்சன் ஆஸ்திரேலியா 12
ராட் லேவர் ஆஸ்திரேலியா 11
பியான் போர்க் ஸ்வீடன் 11
பில் டில்டென் அமெரிக்கா 10
கடந்த பத்து ஆண்டுகளில் விம்பிள்டன் வென்றவர்கள்…
2014: ஜோகோவிச் (செர்பியா)
2013: ஆன்டி முர்ரே (பிரிட்டன்)
2012: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து)
2011: ஜோகோவிச் (செர்பியா)
2010: ரஃபேல் நடால் (ஸ்பெயின்)
2009: ரோஜர் ஃபெடரர் (ஸ்விஸ்)
2008: ரஃபேல் நடால் (ஸ்பெயின்)
2007: ஃபெடரர் (ஸ்விஸ்)
2006: ஃபெடரர் (ஸ்விஸ்)
2005: ஃபெடரர் (ஸ்விஸ்)