வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருகின்றது – சிவசக்தி ஆனந்தன்

வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மீனவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை. வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர்.

போர் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவிகள் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டியது அவசியமானது. வடக்கு கிழக்கு மீனவர்களுக்காக புதிய மீன்பிடித் துறைமுகமொன்று தேவைப்படுகின்றது. எரிபொருள் நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.

மீன்பிடிக்கு தேவையான உபகரண விநியோகமும் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது – விஜயகலா மகேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுன்னாகம் மின் நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் நீர் மாசுறுகின்றது. மாசுப்பொருட்கள் குறிப்பாக கழிவு எண்ணெய் நீரில் கலக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு துரித கதியில் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண அதிகளவு நீர் பவுசர்கள் ஈடுபடுத்த வேண்டும்.

நீர் முகாமைத்துவம் குறித்த அரசாங்கத்தின் புதிய திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் குளங்கள் வாவிகள் புனரமைக்கப்பட வேண்டும். இதன் ஊடாக நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம்ஆனந்தன்உதாசீனம்உறுப்பினர்கூட்டமைப்புசிறீலங்காசிவசக்திநாடாளுமன்றம்போர்மக்கள்மீனவர்கள்வடக்குவாழ்வாதாரம்
Comments (0)
Add Comment