வடமாகாணத்தை தனி நாடாக அரசு பிரகடனப்படுத்தி இருக்கிறதா? – பா. அரியநேந்திரன்

வடமாகாணத்தை தனி நாடாக இந்த அரசு பிரகடனப்படுத்தி இருக்கிறதா? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்வதற்கு முன் அனுமதி அவசியம் என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பணிப்பாளருமான பிரிகேடியர் ரூவன் வணிகசூரிய தெரிவித்துள்ள கருத்து குறித்தே அவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கருத்துரைக்கையில்… இந்த நாட்டில் 9 மாகாணங்கள் உள்ளன. இதில் 8 மாகாணங்களுக்கும் இல்லாத நடைமுறை வடமாகாணத்திற்கு மாத்திரம் வருவதற்கான காரணம் என்ன?

வடமாகாணம் இந்த நாட்டில் உள்ளடக்கப்படவில்லையா? அவ்வாறாயின் அரசாங்கம் வடமாகாணத்தினை வேறு ஒரு நாடாகவா பிரகடனப்படுத்தி இருக்கின்றது. ஒரே நாடு ஒரே தேசம் என்று கூறுபவர்கள் ஏன் வடமாகாணத்தினை மாத்திரம் புறந்தள்ளுகின்றார்கள். அங்கு வாழ்பவர்கள் வேறு நாட்டு பிரஜைகள் என்றா அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வட மாகாணத்திற்குப் போனால் எங்கு செல்ல வேண்டும் தங்கும் இடம் எது என்ற விடயங்களை முன் கூட்டியே எமது பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும் என்று கூறுவது எந்தவிதத்தில் ஜனநாயக நாட்டில் நியாயமான செயற்பாடாகும்?

2009க்கு பின்னர் நாட்டில் எந்தப் பாகத்திற்கும் யாரும் செல்ல முடியாது என்று கூறிய அரசாங்கம் இன்று வடமாகாணத்திற்கு மாத்திரம் தடை விதிப்பதற்கான காரணம் என்ன? அங்கு இராணுவ ஆட்சி தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இவரது தடை சிறந்த உதாரணமாகும்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனுமதி பெற வேண்டுமாக இருந்தால் குறிப்பாக ஏன் பாதுகாப்பு அமைச்சிடம் தான் பெற வேண்டும்? நாட்டிலே சிவில் நிருவாகம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்று கூறுபவர்கள் பொலிஸாரிடம் அங்கு செல்வதற்கான அனுமதியினை பெறலாம் என்று கூறாமல் பாதுகாப்பு அமைச்சிடம்தான் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதன் உள்நோக்கம் என்ன? இந்த அரசாங்கம் வெளிநாட்டு பிரஜைகளை சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது போல் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களையும் சந்தேகக்கண்கொண்டு பார்க்கின்றது என்பதற்கு இதுவும் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.

அண்மையில் இந்த நாட்டின் ஜனாதிபதி வடமாகாணத்திற்கு 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டு வந்ததன் பின்னர் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டிலே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் வருகின்றது என்பதனை த.தே. கூட்டமைப்பு பகிரங்கமாகவே கூறி வருகின்றது.

இந்த நாட்டிலே சமாதானம் நிலவுகின்றது என்று சர்வதேசத்திற்கு போலிப்பிரசாரம் செய்யும் இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தினை இனியாவது சர்வதேசம் புரிந்து செயற்பட்டு எமது மக்களுக்கான இறுதியும் நிரந்தரத்தீர்வினையும் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசம் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

அரசுஆட்சிகருத்துரைசர்வதேசம்சிறீலங்காதமிழ்தீர்வுநாடுநியாயம்பா.அரியநேந்திரன்பிரகடனம்பிரஜைகள்புரிதல்மக்கள்மாகாணம்வடக்கு
Comments (0)
Add Comment