சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் ஒவ்வொரு வருடமும் ஆவணி 30ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. அந்நாளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற உள்ளது. வடக்கு மாகாணத்தில் வவுனியா A9வீதியில் பன்றிக்கெய்த குளம் விநாயகர் ஆலயத்தில் ஆரம்பித்து ஒமந்தை இராணுவ சாவடியில் நிறைவுபெறும்.
அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கல்முனை தரவைப் பிள்ளையார் கோவிலில் காலை 10மணிக்கு ஆரம்பமாகி கல்முனை தமிழ்பிரதேச முன்றலில் நிறைவுபெறும். இவ் மாபெரும் எழுச்சி பேரணியை முன்னிட்டு வடக்குகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பால் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. அதில் இப்போராட்டத்திற்கு இளைஞர்கள்,அரச அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்,வர்த்தகசங்க தொழிலாளர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் எம்முடன் கலந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேட்டுகொண்டனர்.
அத்துடன் 10வருடங்கள் ஆகியும் எமது உறவுகள் பற்றி எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை. இராணுவத்திடம் கையால் ஒப்படைக்கப்பட்ட உறவுகள், சரணடைந்தவர்கள், இராணுவத்தாலும் துணைஇராணுவ குழக்களாலும் கடத்தப்பட்ட உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூறவேண்டும். பலமுறை அரசாங்கத்திற்கு அறிக்கை, மகஜர் சமர்பித்தோம் ஐனாதிபதியை நேரில் சந்தித்தோம் எந்த பலனும் இல்லாமல் சர்வதேசத்தையும் சர்வதேச கலப்பு நீதிமன்றத்தையும் நம்பியிருப்பதாக கூறினார்கள்.
எட்டு மாவட்டங்களிலும் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இதுவரை 35பேருக்கு மேல் தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் என்ற எதிர்பார்ப்புடன் உயிரை இழந்துள்ளார்கள். Omp வேண்டாம் ,குற்றவாளிகளின் உள்ளக விசாரணை வேண்டாம், சர்வதேசமே தலையிடு போன்ற விடயங்களை குறிப்பிட்டு யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கான நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.