வலி. வடக்கு மற்றும் வலி. கிழக்கில் பொதுமக்களின் காணிகள் பூரணமாகக் கையளிக்கப்படாமையால் அந்த மக்களுக்கு சுபீட்சம் கிடைக்கவில்லை என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் 44 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டி, பெரும் பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வருவதே எமது அவா.
தேர்தல் ஜனவரி மாதம் இடம்பெற்று முடிந்திருந்தாலும் பெப்ரவரி மாதத்தில் இருந்தே எமது பணிகள் ஆரம்பிக்க தொடங்கின. இந்த காலத்தில் எமது அரசாங்கம் சமுதாயத்திற்கு பல நன்மையான காரியங்களை செய்திருக்கின்றன. ஆனால் மக்களிடத்தில் அதனை உணரமுடியாதுள்ளது. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஏனெனில் ஐந்து மாதம் மாத்திரமே கடந்துள்ளமையால் அவ்வாறு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் பார்க்கும் போது எமது இலங்கை தேசம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. முன்பிருந்த அரசாங்கங்கள் பல பிழையான செயல்களை செய்து எமது பொருளாதாரத்தை கேவலமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
எனவே நாம் இனி எமது பொருளாதாரத்தை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதே சவாலாக உள்ளது.
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் நீண்டகாலமாக இருந்து வந்தன. இதனை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சில வேளைகளில் இவ்வாறான நல்ல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு உண்மையான ஆதரவு இல்லை என்பதனையும் நான் சொல்ல விரும்புகின்றேன்.
அரசாங்க தரப்பில் பார்க்கும் போது அரசாங்க காரியதரிசிகள் சிலர் ஒத்துழைப்பை கொடுக்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என தெரியவில்லை.
பிரதமரை நான் சந்திக்கும் போது இது தொடாபில் தெரிவித்திருக்கின்றேன்.
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய சில கச்சேரிகளிலும் அரசாங்க அதிபர்கள் மக்களோடு ஒத்துழைத்து மக்களுக்கு தேவையான சேவைகளை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையாக நடக்கவில்லை என்றே கூறலாம்.
அவ்வாறான பிழையான காரியங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் அவ்விடயத்தை உடனடியாக எனக்கு அறிவியுங்கள் என்பதே எனது கோரிக்கை.
தற்போது யாழ்ப்பாணத்தில் 1000 ஏக்கர் நிலமே விடுவிக்கப்பட்டுள்ளது. சம்பூரிலும் இன்னும் 1000 ஏக்கர் காணி கிடைக்க இருக்கின்றது. ஜனாதிபரி சம்பூர் காணிகளுக்கு செய்ய வேண்டியவற்றை சட்டரீதியாக செய்திருக்கின்றார்.
யூலை மாதம் 10 ம் திகதி அவ் வழக்கு வரும் போது நாம் எமது பத்திரத்தை கையளித்து அதிகாரத்தின் உத்தரவையும் பெறுவோம். என தெரிவித்தார்.