அரச உதவிகளைப் பெற்றுத்தருவதை விட இராணுவத்தினர் கடத்திச் சென்ற எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பெண்ணொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது முதலாவதாகச் சாட்சியமளித்த பெண்ணொருவர்,
எனது கணவர் 2008.03.06 அன்று கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார். இன்றுவரை அவர் குறித்த எந்தத் தனவலும் எமக்குக் கிடைக்கவில்லை.
2008.03.06 அன்று எனது கணவரும், நானும், எனது சகோதரி ஒருவரும் சிவராத்திரி பூசைக்காக திருக்கேதீஸ்வரம் சென்று கொண்டிருந்தோம். இரவு வேளை நாம் சென்றுகொண்டிருந்தபோது வீதியில், அரைக் காற்சட்டையுடன் நின்ற நால்வர் எனது கணவரைப் பெயர் சொல்லி அழைத்துக் கூட்டிச்சென்றனர்.
அன்றிலிருந்து அவருக்கு அன்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. கணவர் காணாமற்போவதற்கு முன்னரும், பின்னரும் எமது வீட்டை இராணுவத்தினர் தொடர்ச்சியாகக் கண்காணித்துவந்தனர்.
தந்திரிமலை இராணுவ முகாமைச்சேர்ந்த துசார என்ற பெயருடைய புலனாய்வாளரே எனது கணவர் பற்றியும் குடும்பம் பற்றியும் விசாரித்து வந்தார்.
எனது கணவர் காணாமற்போன சமயம் துசார என்ற அதிகாரியை நான் சந்திக்க முற்பட்டவேளை அவர் என்னைச் சந்திக்கவில்லை. கிராமிய அபிவிருத்திச் சங்கத்தில் இருந்த எனது கணவர் பொது வேலைகளை ஆர்வமாகச் செய்துவந்தவர்.
இதன் காரணமாக குறித்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே எனது கணவரைக் கடத்திச் சென்றனர். என்று சாட்சியமளித்தார்.
இதன்போது, ஆணைக்குழுவின் அதிகாரிகள், உங்களுக்கு அரச உதவிகள் கிடைத்தனவா, வீட்டுத்திட்டம் கிடைத்தா?’ என்று கேட்டதற்கு, சமுர்த்தி உதவி கிடைக்கிறது. எனக்கு இந்த உதவிகளைப் பெற்றுத்தர எண்ணுவதைவிட கணவனை மீட்டுத்தாருங்கள் என கோரிக்கை விடுத்தார்.