பொலிஸார் விசாரிக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் வரையில் சென்று முறையிடுவதாகவும் சிங்கள அமைப்புகளை ஒன்றிணைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவதாகவும் எச்சரித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதிகள் மொழிசார் பிராந்தியங்களாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் மலையக தமிழ் மக்களின் பிராந்தியங்களும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில் அதனை கண்டிக்கும் வகையில் பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தன.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் செயற்படாது தமிழ் மக்கள் சார்ந்து தனது முடிவுகளை எடுப்பதாகவும் புலிகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலைலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்யக்கோரி பொதுபல சேனா, சிங்கள ராவைய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளன .
இது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் நிருவாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வடமாகாண சபையினதும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரின் செயற்பாடுகள் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளன. நாட்டை பிரித்து மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் தனி பிராந்தியத்தை கேட்கின்றார். தமிழ் மக்கள் தனித்து வாழவேண்டும் எனவும் வடக்கு கிழக்கு இனைய வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். இவர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட போது நாட்டில் பிரிவினைவாதம் உருவாகாது எங்களால் நாடு பிரியாது என பல கதைகளை கூறினார்கள். ஆனால் இப்போது நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் புலிகளை நியாயப்படுத்தி அவர்களை மீண்டும் உருவாக்கும் கருத்துகளை குறிப்பிடுகின்றார். ஆகவே இந்த செயற்பாடுகள் நாட்டை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் இவர்களை உடனடியாக கைதுசெய்து விசாரிக்க வேண்டும். எமது முறைப்பாட்டை கவனத்தில் கொள்ளாது இருந்தாலோ அல்லது புறக்கணித்து செயற்பட்டாலோ நாம் அடுத்த கட்டமாக நீதிமன்றம் வரையில் செல்வோம். அதேபோல் சிங்கள பெளத்த அமைப்புகளை இணைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்..