விசாரணை! த.செல்வா கவிதை

மெல்ல விலகிறது திரை
மீண்டும் அதே காட்சி
விசாரணை நாடகத்தில்
காட்சி என்றும் மாறாது
சனங்கள் சலிப்பைத் தின்றபடி
மீண்டும் அமர்ந்தனர்
கதவுகள் மூடப்பட்டதால்.
முக்காடு இட்டவர்களும்
இருந்தனர் இடையே
முட்டி போட்டவரும்
நின்றனர் .
கொடிய மிருகத்தின் பற்கள்
தெரிய இருள் விலகியது
கலப்படக் காரர்களும் கலந்துவிட்டதால்
வார்த்தை மெல்ல விலகியது.
சற்று தொலைவில்
யாரோ தொங்கினர்
சின்ன முனகல்
சிதறிய தசைப் பிண்டம்.
வீறுட்டு எழுந்தேன்
ஏலவே என் கால்கள் கட்டப்பட்டதை
உணராமல்.
அடுத்த காட்சியில்
இல்லை
ஆட்சியில்
உங்கள் பார்வைக்கு நான் காட்சிப்படுத்தப்படலாம்.
தயவு செய்து பார்க்க வராதீர்கள்
உங்களில் யாராவது காட்சிப்படுத்தப்படலாம்.

த.செல்வா
9.03.2016-

ஈழக் கவிதைகவிதைத.செல்வாதமிழ்க் கவிதை
Comments (0)
Add Comment