கடந்த எட்டு நாட்களுக்கு மேலாக கேப்பாபுலவு மக்கள் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சிங்கள அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமல்ல. எங்கள் மக்களால் ஆணை கொடுத்து பாராளுமன்றங்களுக்கும் மாகாண சபைகளுக்கும் அனுப்பி வைத்த மக்கள் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
கேப்பாபுலவு ஒரு அழகான பிரதேசம். வளமான பூமி. ஆண்டாண்டு காலமாக ஈழ மக்கள் வாழ்ந்த பூர்வீக கிராமம். சிங்கள அரசும் அதன் படைகளும் மக்களின் வளமான பகுதிகளையே இலக்கு வைக்கின்றனர். முதலில் இராணுவக் குடியேற்றம். பின்னர் சிங்களக் குடியேற்றத்திற்காக. அப்படி ஈழ நிலத்தில் குறி வைத்து சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கிய கிராமங்களில் இதுவும் ஒன்று.
கேப்பாபுலவு மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். மகிந்தவின் துப்பாக்கிகளுக்கே அவர்கள் அஞ்சவில்லை. மகிந்த ராஜபக்ச ஈழ நிலத்தில் சிங்கள இராணுவ வதை முகாங்களை விஸ்தரித்தபோது அதனை எதிர்த்த வீரமிகு மக்கள் கேப்பாபுலவு மக்கள். அவர்களின் எதிர்ப்பினால் மகிந்த அரசே சில பகுதி நிலங்களை கையளித்தது.
நல்லாட்சி அரசுக்கு கண்ணில்லை. அது ஒரு குருட்டு அரசு. அதற்கு தமிழ் நிலமும் தமிழ் சனமும் கண்ணுக்குத் தெரியாது. நல்லாட்சி அரசு மாத்திரமல்ல சிங்கள அரசுகள் எல்லாமே தமிழ் மக்கள் விடயத்தில் குருட்டு அரசாகவும். அழித்து ஒழிப்பதில் கண்ணாகவும் இருந்தது வரலாறு. கேப்பாபுலவு மக்கள் எட்டாவது நாளாகவும் தெருவில் பனியில் கிடக்கின்றனர். சிங்கள மக்களுக்கு இப்படி ஒன்று என்றால் இந்த அரசு இப்படி செய்யுமா?
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் தெருவுக்கு வந்து நிற்கிறார்கள். அந்த மக்களின் வலி மிகுந்த காட்சிகள் ஊடகங்கள் எங்கும் பரவுகின்றன. சொந்த மண்ணுக்காக செத்தாலும் சாவோம் என்று சிங்கள அரசை நோக்கி உக்கிரமாக குலெடுக்கிறார்கள் அந்த மக்கள். கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்த சிங்கள அரசின் பாதுகாப்பு செயலாளர் அந்த மக்களின் எச்சரிக்கைக்கு தாம் அஞ்சப்போவதில்லை என்று கூறுகிறார்.
அந்த மக்கள் சிங்கள அரசின் நிலத்திற்காக போராடவில்லை. அவர்கள் தாம் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலத்திற்காக போராடுகிறார்கள். அந்த மக்களின் சொந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வம்பு பேசுகிறது சிங்கள அரசு. எல்லா விடயத்திலும் சிங்கள அரசு இப்படித்தான். இந்தப் போராட்டத்தை தனி ஈழத்தையே மீட்டெடுக்கும் போராட்டமாக சிங்கள அரசுதான் மாற்றிக் கொண்டு இருக்கிறது.
சிங்கள அரசே உடனடியாக அந்த மக்களின் நிலத்தை அவர்களிடமே கையளி. அந்த மக்களின் குரலுக்கு செவிகொடு. உன் ஆக்கிரமிப்பு வெறிக்காக அந்த மக்களின் உயிருடன் விளையாடாதே. லட்சம் ஈழ உயிர்களை தின்று கொளுத்த பின்னருமாக உனக்கு உயிர் பசி? கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்காக அவர்கள் சார்ந்த ஊடகம் என்ற வகையில் செண்பனத்தின் கண்டனத்தையும் கோரிக்கை குரலையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.
எங்கள் மக்கள் தெருவில் இருக்கிறார்கள். நேற்றுத்தான் சம்பந்தர் மெல்ல வாய் திறந்தார். அரசுக்கு காட்டம் என்று கண்டனம் சொல்லியுள்ளார். அரசுக்கு நல்ல ஆதரவை வழங்கிக் கொண்டு அந்த சுகத்தில் இருக்கும் எங்கள் தலைவர்கள் மகிந்த காலத்தில் பேசியதையே இன்றும் பேசிக்கொண்டு, ஏன் சிங்கள அரசில் இணைந்திருக்கிறார்கள்? உண்மையில் ஈழத்தில் என்ன நடக்கிறது?
ஆசிரியர்,
செண்பகம்.
08.02.2017