அமெரிக்காவில் நடந்து வரும் 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. இந்திய நேரப்படி நாளை (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு நியூ ஜெர்சியில் நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான அர்ஜென்டினாவும், நடப்பு சாம்பியன் சிலியும் மல்லுகட்டுகின்றன.
அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, 5 முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்றவர். ‘கிளப் போட்டிகளில் அசத்துகிறார், சர்வதேச போட்டிகளில் சொதப்புகிறார்’ என்ற விமர்சனம் நீண்ட காலமாக அவர் மீது உண்டு. 2014 உலக கோப்பை இறுதிசுற்று, 2015 கோபா அமெரிக்கா இறுதிசுற்று ஆகியவற்றில் தோல்வியை தழுவியதே அதற்கு உதாரணம். இந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இதுவே அவருக்கு அருமையான சர்ந்தர்ப்பமாகும். மேலும் அர்ஜென்டினா பெரிய அளவிலான போட்டிகளில் கோப்பையை வென்று 23 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. கடைசியாக 1993-ம் ஆண்டு கோபா அமெரிக்கா பட்டத்தை அர்ஜென்டினா கைப்பற்றி இருந்தது நினைவு கூரத்தக்கது.
நடப்பு தொடரில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள மெஸ்சி கூறுகையில், ‘கோப்பையை வெல்வதில் அதீத ஆர்வமுடன் இருக்கிறோம். நிச்சயம் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். கடந்த சீசனை விட இப்போது சிறப்பாக தயாராகி இருக்கிறோம். கடந்த ஓராண்டில் நிறைய கற்று இருக்கிறோம். பல வழிகளில் முன்னேற்றம் கண்டு உள்ளோம். ஒரு குழு வலுவடைந்துள்ளோம்’ என்றார். கோன்சலோ குவைன் (4 கோல்), ஏஞ்சல் டி மரியா ஆகியோரும் மெஸ்சி அணிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்தில் சிலி அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் உத்வேகத்தில் அர்ஜென்டினா இருக்கிறது. ஏற்கனவே லீக்கில் 2-1 என்ற கணக்கில் சிலியை தோற்கடித்து இருப்பதால், அர்ஜென்டினாவின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த தடவை வாகை சூடினால் அதிக முறை கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற உருகுவேயின் (15 முறை) சாதனையை அர்ஜென்டினா சமன் செய்து விடலாம்.
ஆனால் சிலியையும் துளியும் குறைத்து மதிப்பிட முடியாது. கால்இறுதியில் மெக்சிகோவை 7-0 என்ற கோல் கணக்கில் ஊதித்தள்ளியதை மறந்து விட முடியாது. அதிரடிக்கு பெயர் போன அந்த அணியில் எடுவர்டோ வார்கஸ் (6 கோல்), அலெக்சிஸ் சாஞ்செஸ் (3 கோல்), அர்துரோ விடால் (2 கோல்) ஆகியோர் தூண்களாக தாங்கி நிற்கிறார்கள். இவர்களது கை ஓங்கினால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் தான்.
மொத்தத்தில் நெருக்கடியை அர்ஜென்டினா திறம்பட சமாளிக்குமா? அல்லது மீண்டும் ஒரு முறை பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.